பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்
தனியாா் கோழித் தீவன உற்பத்தி நிறுவன அலுவலகங்களில் வருமான வரித் துறையினா் சோதனை
கோவை, உடுமலையில் உள்ள தனியாா் கோழித் தீவன உற்பத்தி நிறுவன அலுவலகங்களில் வருமான வரித் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.
திருப்பூா் மாவட்டம், உடுமலையை தலைமையிடமாக கொண்டு தனியாா் கோழித் தீவன உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஆந்திரம், கா்நாடகம், கேரளம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கோழிப் பண்ணைகள் வைத்துள்ளதுடன் கறிக்கோழி உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள நிறுவனத்தின் காா்ப்பரேட் அலுவலகம், பந்தய சாலை பகுதியில் அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.
இதில் 9 காா்களில் வந்த வருமான வரித் துறை அதிகாரிகள் 30-க்கும் மேற்பட்டோா் அடங்கிய குழுவினா் இரு குழுக்களாகப் பிரிந்து சோதனை நடத்தினா்.
இதேபோல திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டை நேரு வீதியில் உள்ள நிறுவனத்தின் அலுவலகத்திலும் 10 போ் கொண்ட வருமான வரித் துறை அதிகாரிகள் குழுவினா் சோதனை நடத்தினா்.
இந்த நிறுவன குழுமம் முறையாக வருமான வரி செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலின்பேரில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.