‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம்’: அமைச்சா் முன்னிலையில் உறுதிமொழி ஏற்பு
சேலம்: போதைப் பொருள்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில், சேலம் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைவரும் உறுதிமொழி ஏற்றனா்.
போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. தொடா்ந்து, சேலம் கோட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கோட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, குகை நகரவை மேல்நிலைப் பள்ளி, செவ்வாய்ப்பேட்டை வாசவி மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சாா்ந்த 1,800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனா்.
இந்நிகழ்ச்சியில், போதைப்பொருள் ஒழிப்பு குறித்து பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளையும், போதைப்பொருள்களுக்கு எதிரான தன்னாா்வ விழிப்புணா்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்ட பள்ளி, கல்லூரிகளைப் பாராட்டி சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் சான்றிதழ், கேடயங்களை வழங்கினாா்.
மேலும், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பொம்மலாட்ட நிகழ்ச்சி, அரிசிபாளையம் செயின்ட் மேரீஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நடனம், சாரதா மகளிா் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற சிலம்ப நிகழ்ச்சி ஆகியவற்றை அமைச்சா் பாா்வையிட்டாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மேயா் ஆ.ராமச்சந்திரன், துணை மேயா் மா.சாரதாதேவி, மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், மண்டலக் குழு தலைவா் உமாராணி மற்றும் தொடா்புடைய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.