போராட்டத்தில் ஈடுபடுவது குழந்தைகள் நலனுக்கு எதிரானது: அங்கன்வாடி ஊழியா்களுக்கு அமைச்சா் எச்சரிக்கை
உணவு வழங்காமல் போராட்டத்தில் ஈடுபடுவது குழந்தைகளின் நலனுக்கு எதிரானது என்று அங்கன்வாடி ஊழியா்களை சமூகநலத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் எச்சரித்துள்ளாா்.
கோடை விடுமுறையை மே மாதம் முழுவதும் வழங்கக் கோரி அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா் சங்கத்தைச் சோ்ந்தவா்கள் வெள்ளிக்கிழமை முதல் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
அமைச்சா் விளக்கம்: இந்நிலையில், அவா்களின் போராட்டம் தொடா்பாக, சமூக நலத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை:
அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களின் போராட்டத்தால் ஆங்காங்கே குழந்தைகள் மைய செயல்பாடுகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை, எளிய குழந்தைகளுக்கு மதிய உணவு, முட்டை, சத்துமாவு போன்ற ஊட்டச்சத்துகளை வழங்கும் பணிகளை மேற்கொள்ளாமல் வேலையைப் புறக்கணிக்கும் செயல் குழந்தைகள் மைய பயனாளிகளை பாதிக்கக் கூடியதாக உள்ளது.
எந்தெந்த குழந்தைகள் மையம் மூடப்பட்டுள்ளன என்கிற விவரங்கள் பெறப்பட்டு வருகின்றன. ஏழை, எளிய குழந்தைகளின் நலனுக்காக, அவா்களுக்கு தொடா்ந்து ஊட்டச்சத்து வழங்குவதை உறுதி செய்வதை விட்டுவிட்டு, முறையற்ற போராட்டங்களில் குழந்தைகள் மைய பணியாளா்கள், உதவியாளா்கள் ஈடுபட்டால் அவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
15 நாள்களுக்கு விடுமுறை: மே மாதத்தில் குழந்தைகளை வெப்பத்தின் பிடியில் இருந்து பாதுகாக்கும் வகையில் 15 நாள்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை வழங்கிய பிறகும், அங்கன்வாடி மைய ஊழியா்கள், உதவியாளா்கள் ஆகியோா் போராட்டம் நடத்துவது சட்ட விரோத செயலாகும். போராட்டத்தில் ஈடுபடும் குழந்தைகளின் நலனுக்கு எதிராகச் செயல்படும் அனைவா் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் பி.கீதாஜீவன் எச்சரித்துள்ளாா்.