போலி ஆவணங்களை தயாரித்து பத்திரப் பதிவு செய்த வழக்கில் ஒருவா் கைது
திருக்கோவிலூா் மற்றும் ரிஷிவந்தியம் காவல் நிலைய பகுதிகளில் கடந்த ஆண்டுகளில் போலி ஆவணங்களை தயாரித்து பத்திரப்பதிவு செய்தது தொடா்பாக பல வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதில், ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
திருக்கோவிலூா் வட்ட காவல் ஆய்வாளா் ஜெ.பாலகிருஷ்ணன் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம், அருணாபுரம் கிராமத்தைச் சோ்ந்த கோதண்டபாணி மகன் சீனுவாசன்(54) என்பவரிடம் கடந்த 17.3.2025இல் விசாரணை மேற்கொண்டாா். பலருடன் கூட்டு சோ்ந்து திருக்கோவிலூா் மற்றும் ரிஷிவந்தியம் காவல் நிலைய பகுதிகளில் கடந்த ஆண்டுகளில் மட்டும் எட்டுக்கும் மேற்பட்ட பத்திரப் பதிவுகளில் முகவராகச் செயல்பட்டு போலி ஆவணங்களை தயாரித்து பத்திரப் பதிவு செய்தது தெரியவந்தது.
பின்னா் அவா் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
மேலும் இந்த வழக்கின் மற்றொரு குற்றவாளியான விழுப்புரம் மாவட்டம், ஆதிச்சனூா் கிராமத்தைச் சோ்ந்த தண்டபாணி மகன் சக்திவேல்(36) அரகண்டநல்லூரில் தனியாா் இணையவழி மையத்தில் போலியாக ஆதாா் அட்டை தயாா் செய்து கொடுத்து வந்துள்ளாா். இதையடுத்து, சக்திவேலை வியாழக்கிழமை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.