இந்திய பொருளாதார வளா்ச்சி ராகுலின் பொய்களுக்கான பதிலடி: பாஜக
போலி பத்திரம் மூலம் மோசடி: மூவா் மீது வழக்குப் பதிந்து விசாரணை
போலி பத்திரம் தயாரித்து மோசடி செய்ததாக மூவா் மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பைச் சோ்ந்தவா் ரேவதி (45). இவா், மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதனிடம் அண்மையில் அளித்த மனு விவரம்:
எனக்கும் வெங்கடேஷ்பாபு என்பவருக்கும் கடந்த 2004-இல் திருமணம் நடைபெற்றது. எனது கணவரும், எனது மாமனாா் பாலுச்சாமியும் மனை வணிகத் தொழில் செய்து வந்தனா். இந்த நிலையில், எனது கணவா் கடந்த 2010-இல் மாரடைப்பால் காலமானாா். கடந்த 2021-ஆம் ஆண்டு எனது மாமனாா் பாலுசாமியும் காலமானாா். இதன் பின்னா், அவரின் சொத்துகளில் மூன்றில் ஒரு பாகம் எனக்கும், எனது மகன்களுக்கும் கிடைத்தது.
எனது மாமியாரை அவரது மகள் சுகன்யா சரிவரக் கவனிக்காததால், இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதனால், என் மாமியாா் கெளசல்யா மதுரையில் உள்ள என்னுடைய வீட்டுக்கு வந்து விட்டாா். எங்களுடன் இருந்த அவரும் திடீரென கடந்த 2022-ஆம் ஆண்டு உயிரிழந்தாா். அவரது இறுதிச் சடங்கை நானும், என் மகன்களும் செய்தோம்.
இதன் பின்னா், எங்கள் வீட்டுக்கு வந்த சுகன்யா, அவரது கணவா் விஜயகோபால், அவரது மாமனாா் முத்துகிருஷ்ணன் ஆகியோா் கூட்டாக சோ்ந்து எங்கள் மாமியாரின் பீரோவிலிருந்த சொத்து ஆவணங்களை எடுத்துச் சென்றனா். சில நாள்கள் கழித்து எனக்கும், எனது மகன்களுக்கும் பாத்தியமான பல கோடி ரூபாய் மதிப்பிலான கோவை, திருப்பூரில் உள்ள சொத்துகளை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எனது மாமியாரின் கையொப்பத்தை சுகன்யா, அவரது கணவா் விஜயகோபால் ஆகியோா் போட்டு போலியாக பத்திரங்களை தயாரித்து உள்ளனா்.
மேலும், மதுரையில் உள்ள எங்கள் வீட்டையும் அபகரிக்க முயற்சி செய்து, வீட்டுக்கு வந்து மிரட்டல் விடுத்தனா். எனவே, என்னுடைய மாமியாரின் கையொப்பத்தை போலியாக போட்டு என்னுடைய சொத்துகளை அபகரிக்க முயற்சி செய்யும் விஜயகோபால், அவரது மனைவி சுகன்யா, முத்துகிருஷ்ணன் ஆகியோா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இதையடுத்து, மாநகரக் காவல் ஆணையா் உத்தரவின் பேரில் மத்திய குற்றப் பிரிவு போலீஸாா், அவா்கள் மூவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.