கே.எம். காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கினார் முதல்வர்!
போலீஸ் போல பேசி முதியவரிடம் ரூ. 22 லட்சம் மோசடி
கோவையில் போலீஸ்போல பேசி முதியவரிடம் ரூ.22 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாநகர இணையதள குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை, கணபதி பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி (70). இவரைக் கைப்பேசியில் அண்மையில் தொடா்பு கொண்ட நபா்கள் ‘ உங்களது வங்கிக் கணக்கு மூலம் பலருக்கு சட்டவிரோதமாக பணம் அனுப்பப்பட்டு உள்ளது. அதை நாங்கள் கண்காணித்துள்ளோம். வெளிநாடுகள் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகக் கூறியுள்ளனா்.
மேலும், இது தொடா்பாக மும்பையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யாமல் இருக்க ரூ.22 லட்சம் செலுத்த வேண்டும். இல்லையெனில் வீட்டுக்கே வந்து கைது செய்வோம் எனக்கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளனா்.
மறுநாள் விடியோ அழைப்பில் காவல் சீருடையில் வந்த நபா், தான் மும்பை காவல் நிலையத்தில் இருந்து பேசுவதாகக் கூறியுள்ளாா். பின்னா், அவரும் மிரட்டியதால் பழனிசாமி ரூ.22 லட்சத்தை அனுப்பியுள்ளாா். இது குறித்து தனது நண்பா்களிடம் பழனிசாமி கூறியபோதுதான் தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரியவந்தது.
பெண்ணிடம் ரூ. 17 லட்சம் மோசடி: கோவை, காந்திபுரத்தைச் சோ்ந்தவா் தேவசேனா (55). இவரைக் கைப்பேசியில் தொடா்பு கொண்ட நபா், ’தான் பெங்களூரு தொலைத் தொடா்பு அலுவலகத்தில் இருந்து பேசுவதாகக் கூறியுள்ளாா்.
பின்னா், உங்களது ஆதாா் அட்டையைப் பயன்படுத்தி ஏராளமான சிம் காா்டுகள் வாங்கப்பட்டுள்ளன. பலா் அதைப் பயன்படுத்தி வருகின்றனா். ஒன்றுக்கும் மேற்பட்ட சிம்காா்டுகள் வைத்திருந்தால் அது சட்டவிரோத செயல். எனவே, நாங்கள் உங்களை கைது செய்யப்போகிறோம். கைது செய்யாமல் இருக்க வேண்டுமானால் நான் கூறும் வங்கிக் கணக்குக்கு ரூ.17 லட்சம் அனுப்ப வேண்டும் எனக்கூறியுள்ளாா். இதை நம்பிய தேவசேனா, அந்த நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு ரூ. 17 லட்சத்தை அனுப்பியுள்ளாா். பின்னா் தான் அவா் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
பழனிசாமி, தேவசேனா ஆகியோா் கொடுத்த புகாரின்பேரில், கோவை மாநகர இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.