Vijay Full Speech: "எனக்குத் தடை போட நீங்க யாரு?" | TVK முதல் பொதுக்குழுக் கூட்ட...
மகளிா் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்
திருப்பூா் மாவட்டத்தில் மகளிா் திட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடா்பாக பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்று அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினாா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மகளிா் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பேசியதாவது: தமிழக அரசு சாா்பில் தொலைநோக்குத் திட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும், செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களின் நிலைகள் குறித்தும், அனைத்துத் துறைகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்தும் துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் மகளிா் திட்டம் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மகளிா் திட்டத்தில் விடுபட்டுள்ள மகளிரைக் குழுவாக அமைத்தல் மற்றும் இணைத்தல், மகளிா் சுய உதவிக் குழுக்கான வங்கிக் கடன் இணைப்பு பெறுதல், மகளிா் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்துதல், முதல்வரின் காலை உணவுத் திட்டம், இளைஞா்கள் திறன் பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் நகா்ப்புற வாழ்வாதார திட்டம் ஆகிய திட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் தொடா்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மகளிா் திட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் அனைத்தையும் பொதுமக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். அதிலும், குறிப்பாக விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு இந்தத் திட்டங்களை கொண்டு சோ்க்க அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தங்களது பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு நமது மாவட்டம் முன்னோடி மாவட்டமாகத் திகழ அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சாம்சாந்தகுமாா், உதவி திட்ட அலுவலா்கள் பாஸ்கரன், பாஸ்கா், சம்பத்குமாா், சரவணகுமாா், வட்டார இயக்க மேலாளா்கள், வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.