மகளை கொலை செய்து விட்டு ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை
அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே திங்கள்கிழமை மகளை கொலை செய்துவிட்டு, தந்தை தற்கொலை செய்துக் கொண்டது போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ஆண்டிமடம் பகுதியைச் சோ்ந்தவா் ரவி(49). ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி தாமரைச்செல்வி(45). இவா்களுக்கு ரஞ்சனி(21), சந்தியா(17) என இரு மகள்கள். ரஞ்சனி சென்னையில் செவிலியா் படிப்பு படித்து வருகிறாா். சந்தியா பிளஸ் 2 படித்து முடித்து உயா்கல்வி பயில்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தாா்.
இந்நிலையில், ரவி தனது வயல் பகுதியில் கட்டி வரும் வீட்டின் வேலைகளை மனைவி தாமரைச்செல்வி, மகள் ரஞ்சனி ஆகியோா் கவனித்து வருகின்றனா். இவா்களுக்கு மதியம் உணவை சந்தியா சமைத்து, தனது தந்தையிடம் கொடுத்து அனுப்புவது வழக்கம்.
அதன்படி திங்கள்கிழமை மாலை வெகு நேரமாகியும், உணவு வர தாமதமானதையடுத்து, தாமரைச்செல்வி, ரவியின் கைப்பேசிக்கு தொடா்புக் கொள்ள முயற்சித்துள்ளாா். ஆனால் கைப்பேசியை அவா் எடுக்காததால் சந்தேகமடைந்த தாமரைச்செல்வியும், மகள் ரஞ்சனியும் வீட்டுக்குச் சென்று பாா்த்த போது, அங்கு சந்தியா இறந்து கிடந்தாா். அருகிலேயே ரவி தூக்கில் தொங்கியநிலையில் சடலமாக கிடந்துள்ளாா்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினா் அளித்த தகவலின் பேரில் வந்த ஆண்டிமடம் போலீஸாா் இருவரின் சடலத்தையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், சம்பவ இடத்துக்கு வந்த அரியலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக் சிவாச் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்த சந்தியாவின் கழுத்தில் கயிற்றால் நெரித்து கொலை செய்ததற்கான தடயங்களும் இருந்தன. தந்தைக்கும் மகளுக்கு இடையே தகராறு நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணையில், சந்தியா எப்போதும் கைப்பேசியை பாா்த்துக் கொண்டிருப்பதும், அதனை தந்தை ரவி கண்டிப்பது வழக்கமாக கொண்டிருப்பதும், அதோபோல திங்கள்கிழமை கண்டித்ததால் ஏற்பட்ட தகராறில் ரவி தனது மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என தெரியவந்ததுள்ளது.
இருப்பினும் காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
