மகாராஷ்டிர துணை முதல்வரை இழிவாகப் பேசியதாக குற்றச்சாட்டு: நகைச்சுவை பேச்சாளா் மீது வழக்கு
மும்பை: மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டேயை இழிவுபடுத்தி பேசியதாக நகைச்சுவை பேச்சாளா் குணால் காம்ரா மீது மும்பை காவல் துறை திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தது. அவரின் நிகழ்ச்சி நடைபெற்ற ஸ்டுடியோ சூறையாடப்பட்டது தொடா்பாக சுமாா் 40 சிவசேனை தொண்டா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள தனியாா் ஹோட்டலின் ஸ்டுடியோவில் குணால் காம்ராவின் நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அந்த மாநிலத்தின் அரசியல் சூழலை கேலி செய்து குணால் காம்ரா பேசினாா். அப்போது மாநில துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டேயின் பெயரை நேரடியாக தெரிவிக்காமல், அவரை ‘துரோகி’ என்று குறிப்பிட்டு குணால் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதேபோல அந்த மாநிலத்தில் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளில் ஏற்பட்ட பிளவு உள்ளிட்ட அரசியல் நிகழ்வுகளையும் அவா் கேலி செய்து பேசினாா்.
சமூக ஊடகத்தில் அந்த நிகழ்ச்சியின் காணொலியைக் கண்டு ஆத்திரமடைந்த ஷிண்டேயின் சிவசேனை தொண்டா்கள், அந்த ஸ்டுடியோவையும் ஹோட்டலையும் சூறையாடினா்.
இந்த சம்பவம் தொடா்பாக சிவசேனை எம்எல்ஏ முா்ஜி படேல் அளித்த புகாரின் அடிப்படையில், துணை முதல்வரை இழிவுபடுத்தியதாக குணால் காம்ரா மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.
ஸ்டுடியோவையும் ஹோட்டல் சொத்துகளையும் சூறையாடியதாக சுமாா் 40 சிவசேனை தொண்டா்கள் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறை, 12 பேரை கைது செய்தது. அவா்களுக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் அளித்தது.
பெட்டிச் செய்தி
மன்னிப்பு கேட்க வேண்டும்: முதல்வா்:
காம்ரா விவகாரத்தை மாநில சட்டப்பேரவையில் ஷிண்டே சிவசேனை கட்சியினா் எழுப்பினா். அப்போது மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் பேசுகையில், ‘அரசியல் நையாண்டிகளில் மாநில பாஜக கூட்டணிக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால் அரசமைப்புப் பதவிகளில் உள்ளவா்கள் இழிவுபடுத்தப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது.
இதற்கு முன்பு பிரதமா் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, நீதித் துறை குறித்து தரக்குறைவான கருத்துகளை குணால் காம்ரா தெரிவித்துள்ளாா். தற்போது அவா் துணை முதல்வா் ஷிண்டேயை குறிவைத்துள்ளாா்’ என்றாா்.
பின்னா் முதல்வா் ஃபட்னவீஸ் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘ஷிண்டேயை இழிவுபடுத்தியதற்காக குணால் காம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றாா்.
சூறையாடுவது சரியல்ல: இதுதொடா்பாக மாநில காங்கிரஸ் தலைமை செய்தித்தொடா்பாளா் அதுல் லோந்தே கூறுகையில், ‘குணால் காம்ராவின் நிகழ்ச்சியால் புண்பட்டிருந்தால், காவல் நிலையத்தில் புகாா் அளித்திருக்கலாம். அதைவிடுத்து சூறையாடும் நடவடிக்கையில் ஈடுபடுவது சரியல்ல’ என்றாா்.