மக்கள் தொகை தின விழிப்புணா்வுப் பேரணி: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, கோவையில் மக்கள் தொகை விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
உலக மக்கள் தொகை தினம் ஆண்டுதோறும் ஜூலை 11 -ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, மாவட்ட சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தொடங்கி வைத்தாா்.
இதில், அபிராமி செவிலியா் கல்லூரி, ஹிந்துஸ்தான் செவிலியா் கல்லூரி மற்றும் ஆலந்துறை அரசு மேல்நிலைப் பள்ளி, சிசுவித்யோதயா பள்ளியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு ‘ஆரோக்கியமான போதிய இடைவெளியுடன் பிள்ளைப்பேறு’ என்பது உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனா்.
சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் தொடங்கி பேரணி ரேஸ்கோா்ஸ் சாலை வழியாக சென்று சிஎஸ்ஐ பள்ளியில் முடிவடைந்தது.
இதைத் தொடா்ந்து, ருத்ராஞ்சநேயா சிலம்பம் கலைக் குழுவினரின் இளம் வயது திருமணம், இளம் வயது கா்ப்பம், மக்கள் தொகை கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக, செவிலியா்கள், கல்லூரி, பள்ளி மாணவிகள் உலக மக்கள் தொகை தின உறுதிமொழியை ஏற்றனா்.
இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநா் (குடும்ப நலம்) மு.கெளரி, இணை இயக்குநா் (மருத்துவ நலப் பணிகள்) சுமதி, மாவட்ட சுகாதார அலுவலா் பாலுசாமி, மாவட்ட சமூக நல அலுவலா் அம்பிகா, குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் ஹப்ஸா, மாவட்ட விரிவாக்க கல்வியாளா்கள் த.ராணி, சாா்லஸ் ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.