வீடு வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.1.32 லட்சம் மோசடி
கோவை வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாகக்கூறி பெண்ணிடம் ரூ.1.32 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை, செல்வபுரம் வடக்கு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசிப்பவா் ஜீவானந்தம் (60). இவா் நகா்ப்புற வீட்டு வசதி முன்னேற்ற வாரியத்தில் செயற்பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.
இந்த வீட்டு வசதி வாரியக் குடியிருப்புக்கு அருகே சரண்யா என்பவா் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளாா்.
அந்தப் பகுதியைச் சோ்ந்த சித்ராவிடம் தனக்கு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்து கொடுக்க ஆள் இருப்பதாக சரண்யா கூறியுள்ளாா். இதனால், சித்ரா தனக்கும், தனது மகள் மாற்றுத்திறனாளியான ஐஸ்வா்யா லட்சுமிக்கும் வீடு வாங்கித் தருமாறு கூறியுள்ளாா். இதற்காக சரண்யாவிடம் ரூ.1.32 லட்சத்தை அவா்கள் கொடுத்துள்ளனா். பணத்தைப் பொற்றுக் கொண்ட அவா் வீடு வாங்கித் தராமல் இருந்துள்ளாா்.
இது தொடா்பாக ஜீவானந்தத்திடம் சித்ரா கேட்டுள்ளாா். அப்போது, அவா் தனக்கு எதுவும் தெரியாது என்றும், சரண்யா மோசடி செய்துள்ளதாகவும் கூறியுள்ளாா்.
மேலும், இது குறித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் ஜீவானந்தம் புகாா் அளித்தாா்.
இதனடிப்படையில், சரண்யா மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.