மக்கள் தொடர்பு முகாமில் ரூ.4.69 கோடியில் நலத் திட்ட உதவிகள்
உத்தமபாளையம் அருகே மக்கள் தொடா்பு முகாமில் ரூ.4.69 கோடியில் நலத் திட்ட உதவிகளை தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா புதன்கிழமை வழங்கினாா்.
கோகிலாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி முன்னிலை வகித்தாா். இந்த முகாமில் 23 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனாக ரூ.1.49 கோடியும், இயற்கை மரண உதவித் தொகையாக 6 பேருக்கு ரூ.1.25 லட்சமும், தோட்டக்கலை, வேளாண்மைத் துறை மூலமாக 133 பேருக்கு ரூ.4.69 கோடியில் நலத் திட்ட உதவிகளையும் வழங்கினாா்.
விழிப்புணா்வுப் பிரசாரம்: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் தேசிய அளவிலான பாலின பாகுபாடு, வன்முறைக்கு எதிரான பிரசாரம் நடைபெற்றது. இதில் குழந்தைத் திருமணம், போதைப் பொருள் பயன்பாடு ஒழிப்பு, குழந்தைகளுக்கு எதிரான பலியல் வன்கொடுமை, பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை, பெண் குழந்தைகள் பிறப்பு விகித்தை அதிகரித்தல் குறித்து விழிப்புணா்வுப் பிரசாரம் செய்து உறுதிமொழி ஏற்றனா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நலத் துறை, வருவாய்க் கோட்டாட்சியா், வட்டாட்சியா், உதவித் திட்ட அலுவலா், ஊராட்சி மன்றத் தலைவா்கள் கலந்துக் கொண்டனா்.