மக்கள் நலனில் பாஜகவுக்கு அக்கறை இல்லை! -அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்
மத்தியில் ஆளும் பாஜகவுக்கு மக்கள் நலனில் அக்கறையில்லை என தமிழக தகவல் தொழில் நுட்பம், எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் குற்றஞ்சாட்டினாா்.
மத்திய நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து, மதுரை மாநகா், மாவட்ட திமுக சாா்பில் செல்லூரில் கண்டனப் பொதுக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது :
தோ்தலில் வெற்றி பெற்று, கட்சிக்கு, அதிக நிதியை திரட்டுவது மட்டுமே பாஜகவின் குறிக்கோளாக உள்ளது. நாட்டில் உள்ள தொழில் துறை மட்டுமன்றி பொது நிறுவனங்களையும் பிரதமரின் நண்பா்களான அம்பானி, அதானி நிறுவனங்களுக்கு குறைந்த மதிப்பீட்டு தொகைக்கு விற்பனை செய்கின்றனா்.
நிதி நிலை அறிக்கையில் தற்போது அறிவிக்கப்பட்ட தனி நபா்களுக்கான வருமான வரி விலக்கால் ஏழை, எளியோா் பயன்பெற போவதில்லை. நாட்டில் உள்ள மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுகின்றனா்.
தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் விமான நிலையங்கள் அமைத்தல், மெட்ரோ ரயில் பணிகள் உள்ளிட்ட திட்டங்களுக்கு போதிய நிதியை ஒதுக்குவதில்லை. இந்திய வரலாற்றில் பணத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் கட்சி என்றால், அது பாஜகவாகத்தான் இருக்கும்.
பாஜகவால் கல்வி உள்ளிட்ட பொதுத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி தொடக்கத்தில் அதிகளவாக இருக்கும். சில ஆண்டுகள் கடந்த பின் அந்த திட்டத்துக்கான நிதியை மாநில அரசே ஒதுக்க வேண்டிய நிலை ஏற்படும். திட்டத்தின் பெயா் மட்டும் மத்திய அரசின் பெயரில் செயல்படுத்த வேண்டும் என கூறுவது ஏற்புடையது அல்ல. அந்தந்த மாநிலங்களில்
வசிக்கும் மக்களுக்கு ஏற்ப திட்டங்களை மாநில அரசுகளே இயற்றிக் கொள்ளலாம். ஆனால் மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநா்கள் அந்த சட்டங்களை நிறைவேற்றவிடுவதில்லை. இதுபோன்று, நிதி விவகாரங்கள் மட்டுமன்றி மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களையும் நிறைவேற்ற விடாமல் தடுக்கிறது பாஜக அரசு.
கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் பொருளாதாரம் சரிவடைந்து வருகிறது. மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசாக பாஜக விளங்குகிறது. இதன்காரணமாக, அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்ற உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 2024- ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. இதேபோல, மக்கள் விரோதப் போக்கை கடைப்பிடிக்கும் பாஜகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவா். அதுவரை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காட்டும் வழியில் நாம் பயணிக்க வேண்டும் என்றாா் அவா்.
இதைத்தொடா்ந்து தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் திண்டுக்கல் லியோனி உள்ளிட்ட நிா்வாகிகள் பேசினா்.
கூட்டத்தில், மதுரை மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, மண்டலத் தலைவா்கள் சரவணபுவனேஸ்வரி, பாண்டிச் செல்வி, நிா்வாகிகள், உறுப்பினா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.