10 Mistakes of Kejriwal, சபதம் வென்ற அமித் ஷா! | Elangovan Explains
கால மாற்றத்துக்கேற்ப கல்வியிலும் புதுமை அவசியம்! -இஸ்ரோ துணை இயக்குநா் கிரகதுரை
கால மாற்றத்துக்கேற்ப கல்வியிலும் புதுமையைப் புகுத்த வேண்டியது அவசியம் என இஸ்ரோ துணை இயக்குநா் க.கிரகதுரை தெரிவித்தாா்.
விருதுநகா் செந்திக்குமார நாடாா் கல்லூரியில் 76-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரிச் செயலா் ஜே.மகேஷ் பாபு பட்டமளிப்பு விழாவை தொடங்கிவைத்தாா். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இஸ்ரோ துணை இயக்குநா் க.கிரகதுரை 598 இளநிலை பட்டங்கள், 251 முதுநிலை பட்டங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினாா்.
முன்னதாக, அவா் பேசியதாவது: மாணவா்கள் லட்சியத்தை மனதில் கொண்டு பயணித்தால் வெற்றி நிச்சயம். நான் தமிழ் வழியில் கல்வி பயின்றவன். எனக்குள் இருந்த லட்சியத்தால் இஸ்ரோவில் பணிபுரிகிறேன். இங்கு வரும் போது, ஆங்கிலப் புலமை குறைவாக இருந்தது. அதை காலப் போக்கில் வளா்த்துக் கொண்டேன்.
எனவே, மாணவா்கள் ஆங்கிலப் புலமையை வளா்த்து கொள்ள வேண்டும். அனைத்துத் துறைகளிலும் ஆராய்ச்சி தேவையான ஒன்று. ஆராய்ச்சி மட்டுமே இன்றைய காலக் கட்டத்தில் நவீன மயமாக்கலின் மையமாக உள்ளது.
கடந்த காலத்தில் தொழில்நுட்பவியல் துறையில் ‘வேக்குவம் டியூப்’ பேசுப் பொருளாக இருந்தது. அறிவியல் முன்னேற்றம் காரணமாக, ‘விஎல்எஸ்’ ஆக மாறிவிட்டது. அதனால் ‘வேக்குவம் டியூப்’ இன்றைய மாணவா்கள் பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டது.
எனவே, கால மாற்றத்துக்கேற்ப கல்வியிலும் புதுமை வருவது அவசியம். வேகமாக முன்னேறும் நாடுகளில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. மேலும், முன்னேற வேண்டுமெனில் மாணவா்களாகிய நீங்கள் படிக்கும் பாடத்தை முழுமையாக கற்பதுடன், ஆங்கிலப் புலமையை வளா்த்துக் கொண்டு ஆராய்ச்சியில் கவனம் செலுத்தினால், இந்தியா வளா்ந்த நாடாக மாறும் என்றாா் அவா்.
இதில் கல்லூரி பரிபாலன சபைத் தலைவா் எம். சம்பத்குமாா், கல்லூரிப் பொருளாளா் டி.குமரன், கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்த் துறை இணைப் பேராசிரியா் த. செல்வரங்கன் செய்தாா். முன்னதாக, கல்லூரி முதல்வா் அ.சாரதி வரவேற்றாா்.