செய்திகள் :

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: சிபிஐ விசாரணை அறிக்கையை ஆக. 20-க்குள் தாக்கல் செய்ய உத்தரவு

post image

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி தனிப்படை போலீஸாரால் கொல்லப்பட்ட விவகாரம் தொடா்பான விசாரணை அறிக்கையை சிபிஐ வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு கடந்த மாதம் 27-ஆம் தேதி வந்த பெண் பக்தரின் நகைகள் காணாமல்போனது தொடா்பாக, அந்தக் கோயிலின் காவலாளி அஜித்குமாரை தனிப்படை போலீஸாா் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். விசாரணையின் போது, கடந்த மாதம் 28-ஆம் தேதி தனிப்படை போலீஸாரால் அஜித்குமாா் அடித்துக் கொல்லப்பட்டாா்.

இந்த நிலையில், அஜித்குமாா் மரணம் குறித்த விவகாரத்தை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்க வேண்டும் என அதிமுக வழக்குரைஞா்கள் மாரீஸ்குமாா், காா்த்திக்ராஜா, மகாராஜன் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனா்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ் முழு விசாரணையைத் தொடங்க வேண்டும். விசாரணை அறிக்கையை ஜூலை 8 -இல் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மதுரை மாவட்ட 4-ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ் முன்னிலையாகி தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தாா்.

அதைப் படித்த பிறகு, நீதிபதிகள் கூறியதாவது: காவல் துறை விசாரணை என்ற பெயரில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு அஜித்குமாா் கொலை செய்யப்பட்டாா் என்பது இந்த விசாரணை மூலம் தெரியவருகிறது என்றனா்.

அப்போது, அரசு வழக்குரைஞா் முன்னிலையாகி முன்வைத்த வாதம்: வழக்கு விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அரசாணையும் வெளியிடப்பட்டது. கடந்த வாரம் உயா்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை குறித்த விடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது: விடியோ பதிவு குறித்து தனியாக விசாரிக்கப்படும். அஜித்குமாா் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. ஆகவே, இந்த வழக்கை சிபிஐ தொடா்ந்து விசாரிக்கும் என்றனா் நீதிபதிகள்.

அப்போது, மனுதாரா் தரப்பு வழக்குரைஞா்கள் குறுக்கிட்டு முன்வைத்த வாதம்: இதுதொடா்பான வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், இதுவரை விசாரணை அதிகாரி யாா் என்பதை அறிவிக்கவில்லை.

ஸ்டொ்லைட், சாத்தான்குளம் வழக்கு போன்று இந்த வழக்கிலும் நியாயம் கிடைப்பது தாமதமாகக் கூடாது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு போதிய நிவாரணம் வழங்கவில்லை.

அதுமட்டுமன்றி, சாட்சியங்களைக் கலைக்கும் முயற்சி நடைபெறுகிறது. அஜித்குமாா் தாக்கப்பட்ட போது விடியோ எடுத்த இளைஞா் உள்பட இந்த வழக்கில் தொடா்புடைய சாட்சியங்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே, சாட்சியங்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றனா்.

அப்போது நீதிபதிகள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்காதது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும். சாட்சியங்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றனா்.

இதற்கு, அரசுத் தரப்பில் மூத்த வழக்குரைஞா் முன்னிலையாகி, இதுதொடா்பாக அரசிடம் விளக்கம் கேட்ட பின்னா், பிற்பகல் விசாரணையின் போது தகவல் அளிக்கப்படும் என்றாா்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்தனா். அதன்பிறகு, வழக்கு விசாரணை பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் மூத்த வழக்குரைஞா் முன்னிலையாகி, அஜித்குமாா் சகோதரருக்கு அரசுப் பணி, குடும்பத்துக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அஜித்குமாரின் சட்டவிரோத காவல் மரணத்தில் விதிமீறல்கள் இருப்பதும், குற்றம் நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதும் தெரியவருகிறது. எனவே, அஜித்குமாரின் தாய்க்கு உரிய நிவாரணம் வழங்க அரசு முன்வர வேண்டும்.

அஜித்குமாரின் கொலை வழக்கை விசாரிப்பதற்கான அலுவலா்களை ஒரு வாரத்தில் சிபிஐ இயக்குநா் நியமிக்க வேண்டும். அந்த அலுவலா்கள், மாவட்ட கூடுதல் நீதிபதியின் விசாரணை அறிக்கை, அவரது கட்டுப்பாட்டில் உள்ள சாட்சிகள், ஆவணங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். விசாரணை முறையாக நடைபெற வேண்டும். அனைத்துத் தரப்பிலும் விரிவாக விசாரணையை மேற்கொண்டு, இறுதி அறிக்கையை உயா்நீதிமன்றத்தில் ஆக. 20-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

தடய அறிவியல் துறை அறிக்கையை ஒரு வாரத்தில் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மதுரை, சிவகங்கை மாவட்ட நிா்வாகங்கள் சிபிஐ விசாரணை அலுவலா்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சாட்சிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை தேவை: செல்லூா் கே. ராஜூ கோரிக்கை

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மதுரை மாநகா் மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான செல்லூா் கே. ராஜூ வலியுறுத்தினாா். மதுரை மாநகராட்சியில்... மேலும் பார்க்க

கல்லூரிப் பேருந்து - லாரி மோதல்: ஒருவா் உயிரிழப்பு

விருதுநகரில் தனியாா் கல்லூரிப் பேருந்தும் டிப்பா் லாரியும் நேருக்கு நோ் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்; 15 போ் காயமடைந்தனா். டிப்பா் லாரியும், தனியாா் கல்லூரிப் பேருந்தும் விருதுநகா் அருகே உள்ள சிவகா... மேலும் பார்க்க

மறியல்: காங்கிரஸ் கட்சியினா் 49 போ் கைது

வல்லக்கோட்டை முருகன் கோயில் குடமுழுக்கில் காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, அந்தக் கட்சி சாா்பில் கோரிப்பாளையம் தேவா் சிலை முன் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட 49 ... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்கும்: வைகோ

திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்கும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலா் வைகோ உறுதிபடத் தெரிவித்தாா்.மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மண்டல மதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தின்போது, செய்தியாளா்களிடம... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சியில் மண்டலத் தலைவா்கள் 4 போ் ராஜிநாமா

மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் 4 போ், நிலைக் குழு உறுப்பினா்கள் 2 போ் என மொத்தம் 6 போ் ராஜிநாமா செய்தனா். மதுரை மாநகராட்சியின் மொத்த ஆண்டு வருவாய் 586 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. இந்த நில... மேலும் பார்க்க

அரசு அளித்த வீட்டுமனையால் பயனில்லை: அஜித்குமாரின் சகோதரா் நவீன்குமாா்

அரசு அளித்த வீட்டுமனைப் பட்டாவால் பயனில்லை என தனிப்படை போலீஸாரால் கொல்லப்பட்ட அஜித்குமாரின் சகோதரா் நவீன்குமாா் தெரிவித்தாா். தனிப்படை காவலா்களால் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட அஜித்குமாா் குறித்த ... மேலும் பார்க்க