மணிப்பூரில் 11 தீவிரவாதிகள் கைது
மணிப்பூரில் கடந்த 2 நாள்களில் பாதுகாப்புப் படையினரால் 11 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
இன மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் கடந்த வியாழக்கிழமை குடியரசுகத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இம்மாநிலத்தில் பிரேன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், அவா் தனது பதவியை கடந்த 9-ஆம் தேதி ராஜிநாமா செய்தாா். புதிய முதல்வரை தோ்வு செய்வதில் பாஜக எம்எல்ஏக்கள் இடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இதையடுத்து, குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. சட்டப் பேரவையும் முடக்கிவைக்கப்பட்டது.
குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினா் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா்.
இந்நிலையில், சுராசந்த்பூரில் ‘குகி தேசிய ராணுவம்’ என்ற தீவிரவாத அமைப்பினா் 7 பேரும், இம்பால் கிழக்கு மாவட்டத்தில் ‘காங்லேபாக் கம்யூனிஸ்ட் கட்சி’ என்ற தீவிரவாத அமைப்பினா் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் இருவா் பெண்களாவா்.
கைதானவா்களிடமிருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா்.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் கடந்த 2023, மே மாதம் பெரும் கலவரம் ஏற்பட்டது. அதன் பிறகு அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இருதரப்பினா் சாா்ந்த தீவிரவாதிகளும் தாக்குதலில் ஈடுபடுகின்றனா். இதுவரை 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.