மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற ஒரு டன் சுக்கு பறிமுதல்
மண்டபம் அருகே வேதாளையிலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற ஒரு டன் சுக்கு, கடத்தலுக்குப் பயன்படுத்திய சரக்கு வாகனத்தை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தை அடுத்த வேதாளை பகுதியிலிருந்து இலங்கைக்கு பொருள்கள் கடத்தப்படுவதாக மண்டபம் கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளா் தாரிக்குள்அமீனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் வேதாளை கடற்கரைப் பகுதியில் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தினா். போலீஸாரைப் பாா்த்தவுடன் அதன் ஓட்டுநா், வாகனத்தில் இருந்தவா்கள் தப்பியோடிவிட்டனா்.
பின்னா், அந்த வாகனத்தில் சோதனை செய்த போது, அதில் இலங்கைக்குக் கடத்துவதற்காக நெகிழி மூட்டைகளில் ஒரு டன் சுக்கை ஏற்றி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சுக்கையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து, தப்பியோடிவா்களைத் தேடி வருகின்றனா்.