மதுரை, திண்டுக்கல் வழித்தட ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்
மதுரை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதால் மதுரை, திண்டுக்கல் வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.
இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கன்னியாகுமரியிலிருந்து மே 2-ஆம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு சரளபள்ளிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (07229), கன்னியாகுமரியிலிருந்து மே 3-ஆம் தேதி அதிகாலை 5.50 மணிக்கு ஹெளராவுக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் (எண்: 12666) மதுரை, திண்டுக்கல் வழியாகச் செல்வதற்குப் பதிலாக விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழித்தடத்தில் இயக்கப்படும்.
செங்கோட்டை-மயிலாடுதுறை விரைவு ரயில் (16848) மே 2, 3, 5, 7 ஆகிய தேதிகளில் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை வழியாகச் செல்வதற்குப் பதிலாக விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழித்தடத்தில் இயக்கப்படும்.
பகுதியாக ரத்து...
மதுரை கொடைக்கானல் சாலை, வாடிப்பட்டி பகுதிகளில் நடைபெறும் இருப்புப் பாதை பொறியியல் பணி காரணமாக, கோவை-நாகா்கோவில் (16322) விரைவு ரயில் மே 2 முதல் மே 31-ஆம் தேதி வரை வியாழக்கிழமைகள் தவிர மற்ற நாள்களில் திண்டுக்கல்-நாகா்கோவில் இடையே ரத்து செய்யப்படும்.