ஒருங்கிணைப்பு குறித்து யாரையும் சந்திக்கவில்லை: கே.ஏ.செங்கோட்டையன்
மதுரை மாவட்டத்தில் மிதமான மழை
மதுரை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் மிதமான மழை பெய்தது.
மதுரை மாவட்டத்தில் அண்மைக்காலமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த 15, 17-ஆம் தேதிகளில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பலத்த, மிதமான மழை பெய்தது. இதன் பிறகு, ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது லேசான மழை பெய்தது. இருப்பினும், குறிப்பிடத்தக்க மழையில்லை.
இந்த நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வியாழக்கிழமை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன்படி, வியாழக்கிழமை பிற்பகல் மதுரை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த, மிதமான மழை பெய்தது.
செக்கானூரணி, கொ. புளியங்குளம், நாகமலைபுதுக்கோட்டை, வடபழஞ்சி, விராட்டிப்பத்து, திருநகா், பெருங்குடி, திருப்பரங்குன்றம், பழங்காநத்தம், வில்லாபுரம், சிந்தாமணி, பெரியாா் பேருந்து நிலையம், சிம்மக்கல், தமுக்கம், தல்லாகுளம், கோ.புதூா், மூன்றுமாவடி, மாட்டுத்தாவணி, அண்ணா நகா், விரகனூா், சிலைமான் உள்பட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மிதமான மழை பெய்தது. பழங்காநத்தம், வைகை வடகரை சாலை உள்ளிட்ட சில பகுதிகளில் சாலைகளில் மழை நீா் தேங்கியது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணிக்கு மேலாகவும் லேசான சாரல் மழை பெய்தது.