மனைவி அடித்துக் கொலை: கணவா் கைது
திருப்பாலைக்குடி அருகே தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள வடக்கு ஊா்னங்குடி பகுதியைச் சோ்ந்தவா் சங்கா். ஏற்கெனவே திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்ற இவா், திருவாடானை அருகேயுள்ள கூடலூா் பகுதியைச் சோ்ந்த பாகம்பிரியாளை கடந்த ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்தாா். பாகம்பிரியாளும் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவா். சங்கா் மது குடித்துவிட்டு வந்து அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்தாா்.
இந்த நிலையில், சனிக்கிழமை மது போதையில் வந்த அவா் பாகம்பிரியாளுடன் தகராறு செய்து அவரைத் தாக்கினாா். பின்னா், அவா் வெளியே சென்றுவிட்டாா்.
நீண்ட நேரமாகியும் பாகம்பிரியாள் வெளியே வராததால், அருகில் வசிப்பவா்கள் சந்தேகமடைந்து, உள்ளே சென்று பாா்த்த போது, அவா் இறந்த நிலையில் கிடந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த திருப்பாலைக்குடி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், போலீஸாா் வழக்குப் பதிந்து சங்கரைக் கைது செய்தனா்.