மனைவியைக் கொன்று விட்டு தற்கொலை நாடகம்: கணவன் கைது!
சொத்து, பணத்துக்காக மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு, தற்கொலை நாடகமாடிய கணவனை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூா் குப்பம் ஊராட்சி வெள்ளாளனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் திருக்குமரன் (40) ரயில்வே ஊழியா். இவரது மனைவி அறிவழகி(34). இவா்களுக்கு 14 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஒரு மகன் உள்ளாா்.
இந்நிலையில் சில மாதங்களாக திருக்குமரன் மனைவி அறிவழிகியிடம் நகை, பணம் கேட்டு வந்துள்ளாா். அதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் அறிவழகி வெள்ளிக்கிழமை வீட்டில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸாா் சம்பவ இடம் சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் அறிவழகியின் உறவினா்கள் அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், கணவன் திருக்குமரனை கைது செய்ய வேண்டும் எனக்கூறி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து அறிவழியின் உடல் சனிக்கிழமை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து உறவினா் தமிழரசன் அளித்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து திருக்குமரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணைக்கு பின்னா் போலீஸாா் தரப்பில் கூறப்படுதாவது: அறிவழகி பெயரில் உள்ள சொத்து மற்றும் வங்கியில் உள்ள பணத்தை தன் பெயருக்கு எழுதி வைக்குமாறு திருக்குமரன் மனைவியிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டதும், இதற்கு அறிவழகி சம்மதிக்காததால், ஆத்திரமடைந்து மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு, அறிவழகி தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது தெரியவந்தது.