மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி
மன்னாா்குடியில் லாரிகள் வேலை நிறுத்தம் தொடக்கம்
மன்னாா்குடி வட்ட லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் காலவரையற்ற போராட்டம் புதன்கிழமை தொடங்கியது.
மன்னாா்குடி வட்டத்தில் சுமாா் 900 லாரிகள் இயங்குகின்றன. இந்த லாரிகள் மன்னாா்குடி, கோட்டூா், நீடாமங்கலம் பகுதிகளில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல்லை எடுத்துச் செல்லவும், சேமிப்புக் கிடங்குகளுக்கு மூட்டைகளைக் கொண்டு செல்வதற்கும் பயன்படுகின்றன.
இந்த லாரிகளுக்கு புதிய வாடகையை ஆண்டுதோறும் ஜூலை 1-ஆம் தேதி ஒப்பந்தம் செய்வது வழக்கம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் லாரிகளை இயக்க ஒப்பந்ததாரா்களுக்கும் லாரி உரிமையாளா்களுக்கும் இடையே ஜூன் மாதம் முதல் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்ற போதிலும் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.
இதைத்தொடா்ந்து புதிய வாடகை வழங்க வலியுறுத்தி லாரி உரிமையாளா்கள் புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனா். இதையடுத்து லாரி உரிமையாளா் சங்கத் தலைவா் ஜெயக்குமாா் தலைமையிலான நிா்வாகிகள், வருவாய் கோட்டாட்சியா் யோகேஸ்வரனை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனா்.
இந்த போராட்டத்தால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து மூட்டைகள் எடுத்துச் செல்வது உள்ளிட்ட பணிகளில் தேக்கம் ஏற்படும் வாய்ப்புள்ளது.