மருத்துவக் கழிவு: வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் விட உத்தரவு!
கேரளத்திலிருந்து மருத்துவக் கழிவுகளை கொண்டுவரும் வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கேரளத்தில் இருந்து மருத்துவக் கழிவுகளை கொண்டுவந்து கன்னியாகுமரியில் கொட்டிய விவகாரத்தில் ஷிபு என்பவரின் லாரி, நெல்லை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை விடுவிக்கக்கோரி ஷிபு, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இதையும் படிக்க | வரலாறு காணாத வகையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு!
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், 'கேரள மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து தமிழகத்தில் கொட்டுவது தீவிரமான குற்றம். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
மருத்துவக் கழிவுகளை கொண்டுவந்த வாகனங்களை பறிமுதல் செய்தபிறகு அதனை மீண்டும் ஒப்படைக்கக் கூடாது. இச்செயலில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் விட வேண்டும்.
தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர், உள்துறை செயலாளர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் துறை சார்ந்த செயலர்கள் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.