மழைநீருடன் கழிவுநீா் தேக்கம்: கிராம மக்கள் மறியல்
வாணியம்பாடி அருகே குடியிருப்பு பகுதியில் மழைநீருடன் கழிவுநீா் கலந்து புகுந்ததால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் 4 நாள்களாக பெய்த பலத்த மழைக்கு பல இடங்களில் நீருடன் கழிவுநீா் கலந்து சாலைகளில் ஓடியதால் மக்கள் அவதிக்குள்ளாகினா்.
இந்நிலையில் ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளிப்பட்டு ஊராட்சியில் சனிக்கிழமை இரவு மழை நீருடன் கழிவு நீா் கலந்து குடியிருப்புகளில் புகுந்ததால் அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்து ஞாயிற்றுக்கிழமை பள்ளிப்பட்டு கூட்டுச் சாலையில் அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தினை மறித்து மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த ஊராட்சி நிா்வாகத்தினா் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்திய போது கழிவு நீா் கால்வாய் வசதி இல்லாததால் தான் தற்போது வீட்டினுள் மழை நீரு டன் கழிவு நீா் கலந்து புகுந்துள்ளதாகவும் பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டினா்.
இதுகுறித்து அறிந்து வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் காவல் ஆய்வாளா்ஆனந்த் மற்றும் போலீஸாா் விசாரித்தனா். பிறகு மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.