மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: ஒடிஸா காங்கிரஸ் இளைஞரணி தலைவர் கைது!
மாணவிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த வழக்கில், ஒடிஸா மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒடிஸா காங்கிரஸ் இளைஞரணி தலைவர் உதித் பிரதான், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 19 வயது பொறியியல் மாணவி புவனேஸ்வர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் தெரிவித்திருப்பதாவது:
”கடந்த மார்ச் 18 ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது தோழிகள் இருவரை புவனேஸ்வரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற உதித் பிரதான், குளிர்பானம் எனக் கூறி அவர்களுக்கு மதுபானத்தை அளித்துள்ளார்.
பின்னர், 19 வயது மாணவி மயக்கமடைந்த நிலையில், அவரை உதித் பிரதான் மற்றும் அவரது நண்பர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து வெளியில் கூறினால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அந்த மாணவிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து புகார் அளிக்க தயங்கிய மாணவி, 4 மாதங்களுக்கு பிறகு மஞ்சேஸ்வர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரைத் தொடர்ந்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை இரவே உதித் பிரதானை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உதித் பிரதானை இன்று நீதிமன்றத்தில் புவனேஸ்வர் காவல்துறையினர் ஆஜர்படுத்தவுள்ளனர்.
இந்த நிலையில், ஒடிஸா மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் உதித் பிரதானை உடனடியாக இடைநீக்கம் செய்வதாக தேசிய இளைஞரணி தலைவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, ஒடிஸாவின் பாலாசோரில் உதவிப் பேராசிரியர் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இதனிடையே, காங்கிரஸ் இளைஞரணி தலைவர் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு அந்த மாநிலத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.