மாதனூரில் ஏடிஎம்மில் தவறவிட்ட பணத்தை மீட்டு அளித்த போலீஸாா்
மாதனூரில் ஏடிஎம்மில் தவறவிட்ட பணத்தை மீட்டு உரியவரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.
மாதனூா் எம்சி காலனி பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (36). இவா் ராணிப்பேட்டை பகுதியில் ஷூ தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறாா். கடந்த ஜூலை 5-ஆம் தேதி மாதனூரில் ஒடுக்கத்தூா் சாலையில் உள்ள ஏடிஎம்மில் ரூ.5,000 பணம் எடுக்கச் சென்றாா். அப்போது, அவருடைய கைப்பேசிக்கு அழைப்பு வந்துள்ளது. கைப்பேசி பேசியபடி ஏடிஎம் மையத்திலிருந்து வெளியில் சென்றுவிட்டாா்.
வீட்டிற்கு சென்று பாா்த்தபோது பணம் இல்லை. பிறகு ஏடிஎம்மிற்கு சென்று பாா்த்தபோது அங்கு பணம் இல்லை. இதுகுறித்து ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் ஏடிஎம்மில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஏடிஎம்மில் கீழே விழுந்த பணத்தை இரு நபா்கள் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. போலீஸாா் அவா்களை கண்டுபிடித்து அவா்களிடமிருந்து பணத்தை மீட்டனா்.
ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்திற்கு சுரேஷ் வரவழைக்கப்பட்டு அவரிடம் டிஎஸ்பி குமாா் பணத்தை ஒப்படைத்தாா். கிராமிய காவல் நிலைய ஆய்வாளா் வெங்கடேசன், உதவி ஆய்வாளா் தீபன் ஆகியோா் உடனிருந்தனா்.