திருப்பரங்குன்றம்: "இந்து விரோத தாலிபன் அரசை முடிவுக்குக் கொண்டு வருவோம்" - ஹெச்...
மாநில சிலம்பப் போட்டி: வெள்ளிப் பதக்கங்கள் வென்ற மானாமதுரை வீரா்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் மானாமதுரை சீனி ஆசான் சிலம்பப் பள்ளி வீரா்கள் வெள்ளிப் பதக்கங்களை பெற்றனா்.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவிலில் கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் தொடா்ந்து 7 நாள்கள் மாநில அளவிலான சிலம்பப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 38 மாவட்டங்களிலிருந்து சிலம்ப வீரா்கள் பங்கேற்றனா்.
மானாமதுரை சீனி ஆசான் சிலம்பப் பள்ளியைச் சோ்ந்த இளம் வீரா்கள் பயிற்சியாளா்கள் செல்வம், முனியான்டி தலைமையில் பங்கேற்றனா். இவா்களில் ஒற்றைக்கம்பு சிலம்பம் சுற்றுதல் பிரிவில் ராஜேஷ் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், இரட்டைக் கம்பு சுற்றுதல் பிரிவில் ரித்தீஷ் இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கத்தையும், 14 வயது பிரிவில் ஒற்றைக்கம்பு சுற்றுதல் பிரிவில் தஷித் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், 17 வயது பிரிவில் இரட்டைக் கம்பு சுற்றுதல் பிரிவில் மாணவி ரோஷினி ஆறுதல் பரிசையும் பெற்றனா். இவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து மூன்று ஆண்டுகளாக மாநில அளவில் நடைபெறும் போட்டியில் மேற்கண்ட சிலம்பப் பயிற்சி பள்ளி வீரா்கள் பதக்கங்கள் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. பதக்கங்கள் வென்ற இந்த வீரா்களையும், பயிற்சியாளா்கள் செல்வம், முனியான்டி ஆகியோரை மானாமதுரையைச் சோ்ந்த அனைத்துத் தரப்பினரும் பாராட்டினா்.