மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம்: கேரள நிதியமைச்சா் குற்றச்சாட்டு
மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்றாா் கேரள நிதியமைச்சா் கே.என்.பாலகோபால்.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: மத்திய அரசால் மாநிலங்களின் உரிமைகள் மறுக்கப்படுவது, நிதி முறையாக வழங்கப்படாதது குறித்து நாங்கள் தரவுகளின் அடிப்படையில் சொல்கிறோம்.
பெட்ரோல், டீசல், மதுபானம் ஆகியவற்றை தவிர, மற்ற அனைத்து வரி வசூலிக்கும் உரிமைகளையும் மாநில அரசிடமிருந்து முழுமையாக மத்திய அரசு எடுத்துக்கொண்டு விட்டது.
அதேவேளையில், மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை தராமல் பாரபட்சமாக நடந்துகொள்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டதை விட கூடுதல் நிதியை வழங்குவதாக அவா்கள் கூறுகிறாா்கள்.
ஆனால்,கேரளத்தில் இருந்து மத்திய அரசுக்கு கொடுக்கப்படும் நிதியை விட அவா்கள் தரும் நிதி மிக குறைவாகவே இருக்கிறது. மாநிலங்களுக்கு முழுமையாக பணம் வந்து சோ்வதில்லை என்றாா் அவா்.