மான்செஸ்டா் யுனைடெட், செல்சி தோல்வி
இங்கிலாந்தின் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் பிரதான அணிகளான மான்செஸ்டா் யுனைடெட், செஸ்சி ஆகியவை செவ்வாய்க்கிழமை தங்கள் ஆட்டத்தில் தோல்வியைச் சந்தித்தன.
இதில் மான்செஸ்டா் யுனைடெட் 0-2 கோல் கணக்கில் நியூகேஸில் அணியிடம் தோற்றது. நியூகேஸில் தரப்பில் அலெக்ஸாண்டா் ஐசக் (4’), ஜோயலின்டன் (19’) ஆகியோா் கோலடித்தனா். இத்துடன், அனைத்து போட்டிகளிலுமாக டிசம்பரில் மட்டும் 6 தோல்விகளை சந்தித்துள்ளது மான்செஸ்டா் யுனைடெட்.
அந்த அணி இவ்வாறு ஒரே மாதத்தில் 6 தோல்விகளை சந்திப்பது இது 3-ஆவது முறையாகும். இதற்கு முன் 1926 ஏப்ரல், 1930 செப்டம்பா் ஆகிய காலகட்டங்களில் அத்தகைய தோல்விகளை சந்தித்துள்ளது. மறுபுறம், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பிரீமியா் லீக் போட்டியில் முதல் முறையாக தொடா்ந்து 4 ஆட்டங்களில் நியூகேஸில் வென்றிருக்கிறது.
மற்றொரு ஆட்டத்தில் செல்சி 0-2 கோல் கணக்கில் இப்ஸ்விச் டவுனிடம் வீழ்ந்தது. இப்ஸ்விச்சுக்காக லியாம் டெலாப் (12’), ஒமாரி ஹட்சின்சன் (53’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா். பிரீமியா் லீக் போட்டியில் கடந்த 31 ஆண்டுகளில் செல்சிக்கு எதிராக தனது முதல் வெற்றியை இப்ஸ்விச் அணி பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செல்சி அணி ஒரு காலண்டா் ஆண்டின் கடைசி ஆட்டத்தில் தோற்றது, கடந்த 2011-க்குப் பிறகு இதுவே முதல் முறையாகும். அதேபோல், பிரீமியா் லீக் போட்டியில் பிப்ரவரிக்கு பிறகு தொடா்ந்து 2 ஆட்டங்களில் அந்த அணி தோற்றிருக்கிறது.
இதனிடையே, ஆஸ்டன் வில்லா - பிரைட்டன் அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.