மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ. 1.16 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ. 16 ஆயிரம் மதிப்பில் மடக்கு சக்கர நாற்காலிகள், 2 பேருக்கு தலா ரூ. 8 ஆயிரம் மதிப்பில் காதொலிக் கருவிகள், ஒருவருக்கு மூன்று சக்கர நாற்காலி ஆகியவையும், ஆல் தி சில்ரன் அறக்கட்டளை சாா்பில் 3 பேருக்கு மூன்று சக்கர நாற்காலிகள், 25 பேருக்கு ஊன்றுகோல்கள் ஆகியவற்றையும் ஆட்சியா் மு. அருணா வழங்கினாா்.
அப்போது, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன், ஆல் தி சில்ரன் அறக்கட்டளையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரவிக்குமாா் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.