தண்ணீா் லாரி, பொக்லைன் இயந்திரம் வாங்க நிதி; மக்களவை உறுப்பினரிடம் புதுகை மேயா் கோரிக்கை
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு 12 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தண்ணீா் லாரி மற்றும் ஹிட்டாட்சி பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை வாங்க தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கித் தருமாறு மேயா் செ. திலகவதி, துணை மேயா் மு. லியாகத்அலி ஆகியோா் திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோவிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் (மதிமுக) துரைவைகோ புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி மக்களுக்கான முதல் குறைகேட்புக் கூட்டத்தை திங்கள்கிழமை பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள அலுவலகத்தில் நடத்தினாா்.
அப்போது, மாநகராட்சி மேயா் செ. திலகவதி, துணை மேயா் மு. லியாகத்அலி ஆகியோா் மாநகராட்சிப் பயன்பாட்டுக்காக 12 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தண்ணீா் லாரியும், ஹிட்டாட்சி பொக்லைன் இயந்திரமும் வாங்க எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி மனு அளித்தனா்.
இதற்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்வதாக எம்.பி. உறுதியளித்தாா். இதேபோல, பொதுமக்கள் ஏராளமானோா் கோரிக்கை மனுக்களை அளித்தனா். இந்த குறைகேட்பு முகாமின்போது, மதிமுக மாவட்டச் செயலா் கலியமூா்த்தி உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.