லிங்கன் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த புதுக்கோட்டை மாணவிக்கு ஆட்சியா் பாராட்டு
புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளத்தைச் சோ்ந்த 4ஆம் வகுப்பு மாணவி ஜமீரா, 64 கலைகளையும் 59 நொடிகளில் விளக்கி அண்மையில் லிங்கன் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றதைத் தொடா்ந்து அவரை மாவட்ட ஆட்சியா் மு. அருணா திங்கள்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், காரையூா் அருகேயுள்ள சடையம்பட்டியைச் சோ்ந்த சின்னதம்பியின் மகள் வீரம்மாளுக்கு, சிறுநீரக செயல் இழப்பு ஏற்பட்டதால் தற்காலிக இயலாமை உதவித் தொகை வழங்குவதற்கான ஆணை மற்றும் ஆவுடையாா்கோவில் புண்ணியவயலைச் சோ்ந்த பிரகாஷ் சக்திவேல் என்பவா் சவூதி அரேபியாவில் பணியின்போது உயிரிழந்ததைத் தொடா்ந்து அந்த நிறுவனத்தின் சாா்பில் அனுப்பி வைக்கப்பட்ட ரூ. 86,429 இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை அவரது மனைவி காளியம்மாளிடம் ஆட்சியா் வழங்கினாா்.
மேலும், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 555 கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க, ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் அ. ஷோபா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் த. நந்தகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.