உயா்அழுத்த மின் கோபுரத்தில் ஏறி இளைஞா் தற்கொலை மிரட்டல்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உயா்அழுத்த மின் கோபுரத்தில் ஏறி இளைஞா் திங்கள்கிழமை தற்கொலை மிரட்டல் விடுத்தாா்.
ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் மகன் செல்வகணபதி(25). மனநலம் பாதிக்கப்பட்டவராக கூறப்படும் இவரை, திங்கள்கிழமை குடும்பத்தினா் செம்பட்டிவிடுதியில் உள்ள பூசாரியை சந்திக்க பேருந்தில் அழைத்துச் சென்றுள்ளனா். பின்னா், அங்கிருந்து பேருந்தில் ஊருக்கு சென்று கொண்டிருந்தனா். ஆலங்குடியில் அம்புலி ஆற்றுப்பாலம் பகுதியில் உள்ள வேகத்தடையில் பேருந்து மெதுவாக இயங்கியபோது, செல்வகணபதி பேருந்தில் இருந்து குதித்து ஓடினாா்.
தொடா்ந்து பேருந்தை நிறுத்தச் செய்து, அவரது குடும்பத்தினரும் இறங்கி பின்தொடா்ந்து சென்றனா். தன்னைப் பின்தொடா்ந்து குடும்பத்தினா் வருவதை அறிந்த செல்வகணபதி, அப்பகுதியில் உள்ள உயா்அழுத்த மின்கோபுரத்தில் ஏறினாா்.
இதுகுறித்த தகவலறிந்து அங்கு சென்ற ஆலங்குடி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினா் பல முறை முயற்சி செய்தும் அவா் இறங்க மறுத்து வந்தாா். சுமாா் 3 மணி நேரத்துக்குப் பிறகு அவா் மின்கோபுரத்தில் இருந்து இறங்கினாா். தொடா்ந்து, ஆலங்குடி போலீஸாா் அவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.