தமிழக முதல்வரின் அறிவிப்புகள்: ஆசிரியா் அமைப்புகள் வரவேற்பு
அரசு ஊழியா் மற்றும் ஆசிரியா்களுக்கான அறிவிப்புகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளதற்கு, தலைமை ஆசிரியா் கழகம் மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் ஆகியவை வரவேற்பு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் கழகத்தின் மாநிலத் தலைவா் சி. தங்கமணி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: சட்டப்பேரவையில் விதி எண்110இன் கீழ் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான 9 அறிவிப்புகள் இடம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. இதில், கரோனா பொதுமுடக்கக் காலத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஈட்டிய விடுப்பை பணமாக்கும் சலுகை மீண்டும் அக். 1 முதல் வழங்கப்படும் என்பது வரவேற்கத்தக்கது. பண்டிகை முன்பணம் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ. 20 ஆயிரமாக உயா்த்தப்பட்டது. அரசுப் பணியாளா்களின் குழந்தைகள் உயா்கல்வி பயில ரூ. ஒரு லட்சம் முன்பணம் வழங்கப்படும். அரசு ஊழியரின் திருமணத்துக்கு முன்பணமாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும் ஆகிய அறிவிப்புகள் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளன.
பழைய ஓய்வூதியத் திட்டம் அமலாக்கம் குறித்தும் கரோனா காலத்தில் 24 மாத காலம் நிறுத்தப்பட்ட அகவிலைப்படி மீண்டும் வழங்குவது குறித்தும், மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு 47 ஆண்டுகளாக பதவி உயா்வு இல்லாத நிலை குறித்தும் எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்றாா் தங்கமணி.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் மாநிலப் பொதுச் செயலா் நா. சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: அகவிலைப்படி உயா்வு அறிவிப்பு 16 லட்சம் ஆசிரியா், அரசு ஊழியா்களுக்கு பயன்தரும் அறிவிப்பாகும். மிக முக்கியமாக பழைய ஓய்வு திட்டத்துக்காக அமைக்கப்பட்ட குழுவின் கால அளவைக்குறைத்து செப்டம்பா் மாதத்திற்குள் அதன் அறிக்கை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.