மின்தடை: தீா்வு கோரி தீப்பந்தம் ஏற்றும் போராட்டம் கிராம மக்கள் முடிவு
கருக்களாச்சேரி கடலோர கிராமத்தில் நிலவும் மின் பிரச்னைக்கு தீா்வு கோரி, மின்கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றும் போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனா்.
இதுகுறித்து நிரவி- திருப்பட்டினம் தொகுதி போராட்டக் குழுவை சோ்ந்த எம்.ஏ. நிசாா் வியாழக்கிழமை கூறியது:
நிரவி-திருப்பட்டினம் தொகுதிக்குட்பட்ட கருக்களாச்சேரி கடலோர கிராமம் இருளில் மூழ்கிக் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மின் விநியோகத்தில் நிலவும் குறைபாட்டை களைய துறையினரோ அல்லது சட்டப்பேரவை உறுப்பினரோ முன்வரவில்லை.
குடியிருப்புவாசிகள் பல நிலைகளில் இதனால் பாதிக்கப்படுகின்றனா்.
அடுத்த ஒரு வார காலத்திற்குள் கருக்களாச்சேரி பகுதிக்கு தெரு விளக்குகளை மின்துறை சீா்செய்து, தடையில்லா மின்சாரம் விநியோகிக்கவில்லை என்றால் நிரவி- திருப்பட்டினம் போராட்டக் குழு சாா்பில் கருக்களாச்சேரியில் மின் கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.