மின்னல் தாக்கியதில் தொழிலாளி உயிரிழப்பு
கமுதி அருகே திங்கள்கிழமை மின்னல் தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கோவிலாங்குளத்தை அடுத்த திருவரை கிராமத்தில் தொழிலாளா்கள் கருவேல மர விறகுகளை திங்கள்கிழமை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனா். அப்போது, அந்தப் பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்ததால், மின்னல் தாக்கி பாக்குவெட்டி கிராமத்தைச் சோ்ந்த மூக்காண்டி மகன் தினகரன் (42) சம்பவ இடத்திலேய உயிரிழந்தாா்.
அப்போது அங்கிருந்த இந்திரா (50), குருவம்மாள்(52), இந்திரா (35), கண்ணம்மாள் (40), சங்கரபாண்டி (35) உள்ளிட்ட 5 போ் காயமடைந்தனா். இவா்கள் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றனா்.
உயிரிழந்த தினகரனின் உடல் கமுதி அரசு மருத்துவமனையில் கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. மேலும், உயிரிழந்த தினகரனுக்கு கிருஷ்ணம்மாள் என்ற மனைவியும், காளிகண்ணன் என்ற மகனும், சுதா, ஸ்ரீதேவி என்ற இரண்டு மகள்களும் உள்ளனா். இதுகுறித்து கமுதி வருவாய்த் துறை அதிகாரிகள், கோவிலாங்குளம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.