மீலாது நபி, ஓணம்: தலைவா்கள் வாழ்த்து
மீலாது நபி மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி அரசியல் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக): எளியோா்களிடம் கருணை காட்டுங்கள்; சிந்தனையிலும், நடத்தையிலும் தூய்மை உடையவராக இருங்கள்; பசித்தவா்களுக்கு உணவு அளியுங்கள் என்பது, இறைத் தூதா் நபிகள் நாயகம் உலகுக்கு எடுத்துரைத்த போதனைகளாகும். நபிகள் நாயகம், போதித்த சாந்தியும், சமாதானமும், சகோதரத்துவமும் இன்றைய உலகின் இன்றியமையாத தேவைகள். அமைதி தழைக்கவும், சமாதானம் ஓங்கவும், சகோதரத்துவம் வளரவும் உழைப்போம்.
திருவோணத் திருநாளான இந்த நன்னாளில், இல்லந்தோறும் அன்பும், அமைதியும் நிலவட்டும்; மகிழ்ச்சியும், செல்வமும் பெருகட்டும் என்று மலையாள மொழி பேசும் மக்களுக்கு வாழ்த்துகள்.
கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): நபிகள் நாயகம் போதனைகளின்படி, அனைத்து மக்களிடையேயும் அன்பையும், ஏழை மக்களிடம் பரிவையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுவதன் மூலம் வகுப்புவாத சக்திகளின் பிளவு அரசியலை முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
மேலும், மலையாள மக்கள் அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துகள்.
வைகோ (மதிமுக): நபிகள் நாயகத்தின் பிறந்த நாளாகிய இந்தப் பொன்னாளில், தமிழகத்தில் சமய நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க உறுதி எடுப்போம்.
இதேபோல், பாமக தலைவா் அன்புமணி, தமாகா தலைவா் ஜி.கே.வாசன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.