முதலில் இந்தி, பின்னர் சமஸ்கிருதம்; இதுதான் பா.ஜ.க. கொள்கை: முதல்வர் ஸ்டாலின்
இந்தியை அரியணையில் அமர வைத்த பிறகு சமஸ்கிருதத்தை பாஜகவினர் கையில் எடுப்பார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்லாவரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது, பல்வேறு காலக்கட்டங்களில் இந்தித் திணிப்பை எதிர்த்து நாம் நடத்திய தியாக வரலாறுதான், மொழிப்போர்! இன்றைக்கும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், இந்தியைத் திணிக்கலாமா - சமஸ்கிருதத்தை திணிக்கலாமா என்றுதான் ஒன்றிய ஆட்சியாளர்கள் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்…
அன்னைத் தமிழை அழிக்க அந்நிய இந்தி நுழைக்கப்படுகிறது, 1938-ஆம் ஆண்டு இந்தித் திணிப்பு தொடங்கியபோது - இந்தித் திணிப்பை கடுமையாக எதிர்த்து தந்தை பெரியார் சிறை சென்றார். நடராசனும் - தாளமுத்துவும் சிறைக்களத்தில் உயிர்த் தியாகம் செய்தார்கள்! “இது அரசியல் போராட்டம் அல்ல, பண்பாட்டுப் போராட்டம்” என்று தந்தை பெரியார் அடையாளப்படுத்தினார். அதுமட்டுமல்ல, எச்சரிக்கையாக ஒன்றைச் சொன்னார்… “இந்தியை அல்ல, எத்தனை மொழிகளை திணித்தாலும் தமிழ் அழிந்துவிடாது. ஆனால், தமிழனின் பண்பாடு அழிந்து போகும்” என்று சொன்னார்.
அதை முறியடிக்கத்தான் 1948-ஆம் ஆண்டு மொழிப் போராட்டத்தை அண்ணா தலைமை வகித்து நடத்தினார். இப்படி மொழியைக் காக்க போராடிய நம்முடைய திமுக ஆட்சி 1967-இல் அமைந்த பிறகுதான், தமிழ்நாட்டை இருமொழிக் கொள்கை கொண்ட மாநிலமாகப் பாதுகாத்தோம்! அதற்கு சிக்கலை உருவாக்கத்தான், மும்மொழித் திட்டத்தை கொண்டு வர பார்க்கிறார்கள்.
தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வருவதே இந்தியையும், சமஸ்கிருதத்தையும் நமது மீது திணிக்க வேண்டும் என்றுதான்! இவ்வாறு, நாம் எத்தனையோ மொழித் திணிப்புகளையும், பண்பாட்டுத் திணிப்புகளையும் கடந்துதான் வந்திருக்கிறோம்!
இப்படிப்பட்ட தொல்சமூகமான தமிழ்ச்சமூகம் மேல், ஆரிய மொழியை நேரடியாகத் திணிக்க முடியவில்லை என்று பள்ளிகள் மூலமாக - பல்கலைக் கழகங்கள் மூலமாகத் திணிக்க நினைக்கிறார்கள்! மாநில அரசு நிதியால், தமிழ்நாட்டு மக்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட நம்முடைய பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தரை மட்டும் ஆளுநர் நியமிப்பாரா? நான் கேட்க விரும்புவது… உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்க – நிலம் கொடுத்து – அதை வளர்த்தெடுத்து கட்டடங்கள் கட்டி - பேராசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் எங்களுக்கு - பல்கலைக்கழகத் துணைவேந்தரை நியமிக்கத் தெரியாதா?
அண்மையில் யு.ஜி.சி. வரைவு நெறிமுறைகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள்… அதை திரும்பப் பெற வேண்டும் என்று நாட்டிலேயே முதன்முறையாக நாம்தான் சட்டப்பேரயில் தீர்மானம் கொண்டு வந்தோம். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நான் கடிதம் எழுதியிருக்கிறேன். அதன் தொடர்ச்சியாகத்தான், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது போன்று உங்கள் மாநில சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றுங்கள்" என்று இந்தியா கூட்டணி ஆளும் மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதினேன்… தமிழ்நாட்டைத் தொடர்ந்து கேரள சட்டப்பேரவையில் இப்போது தீர்மானம் நிறைவேற்றிவிட்டார்கள். கர்நாடக அரசும் எதிர்த்திருக்கிறது! பல்கலைக் கழகங்களை உருவாக்குவது மாநிலங்கள். அப்போது, பல்கலைக் கழகங்களை நிர்வகிக்கும் - வழிநடத்தும் - தலைமை வகிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வேண்டாமா? அதாவது, எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல் - எதைச் செய்யக் கூடாதோ அதையெல்லாம் செய்கிறது ஒன்றிய அரசு.
தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய இயற்கை பேரிடர் நிவாரண நிதியை தர மறுக்கிறார்கள். பள்ளிக் கல்வித் துறைக்குத் தர வேண்டிய நிதியைத் தர மறுக்கிறார்கள். புதிய சிறப்புத் திட்டங்களை அறிவிக்க மறுக்கிறார்கள். ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு என்ற பெயரே இல்லை. இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம்… இதையெல்லாம் செய்திருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை!
ஆனால், எதைச் செய்கிறார்கள் என்றால்? இந்தியைத் திணிப்பார்கள்! சமஸ்கிருதப் பெயர்களை புகுத்துவார்கள்! மாநில உரிமைகளில் தலையிடுவார்கள்! குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வருவார்கள்! நம்முடைய குழந்தைகளை பலிவாங்க நீட் நடத்துவார்கள்! புதிய கல்விக் கொள்கையை புகுத்துவார்கள்! இதுதான் ஒன்றிய பா.ஜ.க. அரசின் எதேச்சாதிகாரம்!
ஒற்றை மதம்தான் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கிறது. ஒற்றை மொழிதான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. இன்றைய தினம் அவர்கள் இந்தியின் ஆதரவாளர்களாகக் காண்பித்துக் கொள்கிறார்கள்.
சசிகுமார் - ராஜு முருகன் படத்தின் போஸ்டர் அப்டேட்!
ஆனால், உண்மை என்ன? நான் எப்போதுமே ஒன்றைச் சொல்வேன்… பா.ஜ.க.வை பொருத்தவரைக்கும், எதிலுமே குறுகிய காலச் செயல்திட்டமாக இருக்காது. நீண்டகால செயல்திட்டமாகத்தான் இருக்கும். அவர்கள் சமஸ்கிருத ஆதரவாளர்கள்! நேரடியாக சமஸ்கிருதத்தை சொன்னால் கடுமையாக எதிர்ப்பு வரும் என்று முதலில் இந்தியைச் சொல்கிறார்கள். இந்தியை அரியணையில் அமர வைத்த பிறகு சமஸ்கிருதத்தை கையில் எடுப்பார்கள். முதலில் இந்தி - பின்னர் சமஸ்கிருதம். இதுதான் பா.ஜ.க. கொள்கை!
இன்றைக்கு நாம் அடைந்திருக்கும் வளர்ச்சியை சாதாரணமாக அடையவில்லை. சமூக நீதிக்காக 100 ஆண்டுகள் போராடியிருக்கிறோம்... உழைத்திருக்கிறோம். அண்ணா ஏற்படுத்தித் தந்த அடித்தளத்தில் - நவீன தமிழ்நாட்டை தலைவர் கலைஞர் உருவாக்கினார். நம்முடைய திராவிட மாடல் அரசு அனைத்து வகையிலும் தமிழ்நாட்டை மேலும் உயர்த்தி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.