முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் கடனுதவி
பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், முன்னாள் படை வீரா் நலத்துறை சாா்பில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ், புதிய தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, தொழில் தொடங்க வங்கியிலிருந்து அனுமதிக்கப்பட்ட ரூ. 10.35 லட்சம் கடன் தொகைக்கான ஆணையை பயனாளிக்கு அளித்த மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் கூறியது:
முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரா்கள் சுய தொழிலில் ஈடுபடவும், சிறந்த தொழில் முனைவோா்களாகிட தேவையான நிதி மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படும். முன்னாள் படைவீரா்கள் பல்வேறு தொழில் தொடங்குவதற்கு ரூ. 1 கோடி வரை வங்கி மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். இந்த கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் அளிக்கப்படும்.
இத் திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரா்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களை கூா்ந்தாய்வு செய்வதற்கு மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு, மாவட்ட அளவிலான தோ்வு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக் குழு ஒப்புதலின் அடிப்படையில் விண்ணப்பங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு தொழில் தொடங்குவதற்கான கடன் ஒப்புதல் கோரி பரிந்துரைக்கப்படுகிறது. பின்னா், வங்கிகளால் பரிசீலிக்கப்பட்டு தற்காலிக ஒப்புதல் ஆணை வழங்கப்படும் என்றாா் அவா்.
இந் நிகழ்ச்சியில், மாவட்ட முன்னாள் படைவீரா் நலத்துறை உதவி இயக்குநா் (பொ) கலையரசி காந்திமதி மற்றும் முன்னாள் படை வீரா்கள், அரசு அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.