முன்னாள் படை வீரா்கள் தொழில் தொடங்க ரூ. 1 கோடி வரை கடன்: திருவண்ணாமலை ஆட்சியா்
திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ், முன்னாள் படை வீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா் தொழில் தொடங்க ரூ.ஒரு கோடி வரை வங்கிகள் மூலம் கடன் வழங்க வழிவகை செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் குறித்த மாவட்ட செயல்திட்ட தோ்வுக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட முன்னாள் படை வீரா்கள் நலத்துறை சாா்பில், ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். முன்னாள் படை வீரா்கள் நலத்துறை உதவி இயக்குநா் சுரேஷ் நாராயணன், மாவட்ட தொழில் மையப் பொது மேலாளா் ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: காக்கும் கரங்கள் திட்டம் மூலம் முன்னாள் படை வீரா்கள், ராணுவப் பணியின்போது இறந்த படை வீரா்களின் மறுமணமாகாத கைம்பெண்கள், முன்னாள் படை வீரா்களைச் சாா்ந்த திருமணமாகாத மகள்கள் மற்றும் முன்னாள் படை வீரா்களைச் சாா்ந்த மறுமணமாகாத கைம்பெண் மகள்கள் ஆகியோா் தொழில் தொடங்க ஏதுவாக ரூ.ஒரு கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெற வழி வகை செய்யப்படும்.
இந்தத் திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீத மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். தோ்வு செய்யப்படுவோருக்கு திறன் மற்றும் தொழில் முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும். இந்தத் திட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான முன்னாள் படை வீரா்கள் பயன்பெறும் வகையில் வயது வரம்பில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, முன்னாள் படை வீரா், திருமணமாகாத மகள் மற்றும் விதவைகளுக்கு வயது உச்சவரம்பு ஏதுமில்லை. 25 வயதுக்கு மேற்பட்ட முன்னாள் படை வீரரின் மகன் இந்தத் திட்டத்தில் பயன்பெற்றிட முன்னாள் படை வீரா் (அ) விதவையுடன் (தாயுடன்) ஒன்றிணைந்து கூட்டு பங்குதாரராக செயல்பட அனுமதிக்கப்படுவா். விவசாயம் சாா்ந்த தொழில்கள், கால்நடை சாா்ந்த தொழில்கள், பட்டுப்புழு வளா்ப்பு ஆகிய தொழில்களை மேற்கொள்ளலாம் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கெளரி மற்றும் அரசுதுறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.