மும்பை கனமழை; மெட்ரோ ரயில் நிலையத்தைச் சூழ்ந்த வெள்ள நீர்... `திறந்து ஒரே மாதத்தில் இப்படியா?'
மும்பையில் மூன்றாவது மெட்ரோ ரயில் தடம் பூமிக்கு அடியில் ஆரே காலனியில் இருந்து ஒர்லி வரை பயன்பாட்டில் இருக்கிறது. இதில் முதல் பகுதி ஆரே காலனியில் இருந்து பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் வரை மட்டுமே செயல்பாட்டில் இருந்தது. இம்மாதம் 10ம் தேதிதான் இந்த மெட்ரோ ரயில் தடம் ஒர்லி வரை நீட்டிக்கப்பட்டது. அவசர அவசரமாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. தற்போது இந்த ஆண்டு பருவமழை மும்பையில் முன்கூட்டியே தொடங்கிவிட்டது. இதனால் மும்பை முழுக்க வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ரயில், வாகனம், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று இரவில் இருந்து இன்று வரை இம்மழை தொடர்ந்தது. இம்மழையால் மும்பை மூன்றாவது மெட்ரோ ரயில் நிலையங்களில் மழை நீர் புகுந்தது. மேலிருந்து அதிக அளவு தண்ணீர் கசிவு இருந்தது.

அதோடு ஒர்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் வெளியில் இருந்தும் தண்ணீர் படிக்கட்டில் அருவி போன்று மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் சென்ற காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி இருக்கிறது. இதனால் மெட்ரோ ரயில் பிளாட்பார்ம் மற்றும் தண்டவாளத்தில் கூட தண்ணீர் தேங்கி நின்றது. மெட்ரோ ரயில் பாதி அளவுக்கு தண்ணீர் தண்டவாளத்திற்கு தேங்கியுள்ளது. எனவே பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டு பணியாளர்கள் சுரங்க ரயில் நிலையங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். எனவே பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். மிகவும் மோசமான தரத்துடன் மெட்ரோ ரயில் நிலையங்கள் கட்டப்பட்டு இருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஏற்கனவே மும்பையில் கட்டப்பட்ட காங்கிரீட் சாலைகளில் கட்டி முடிக்கப்பட்ட ஒரு சில மாதங்களில் விரிசல் ஏற்பட்டது. தற்போது மெட்ரோ ரயில் நிலையங்களும் மிகவும் தரமில்லாமல் கட்டப்பட்டு இருப்பதாக பயணிகள் சமூக வலைதளத்தில் அரசுக்கு எதிராக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். தென்மும்பையில் உள்ள கெம்ஸ் கார்னர் ரோடு பழுதடைந்துள்ளது. இதனால் வாகனங்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை காங்கிரஸ் தலைவர் வர்ஷா கெய்க்வாட் மெட்ரோ ரயில் நிலையங்களில் தண்ணீர் புகுந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து மாநகராட்சி நிர்வாகம் இன்னும் மழைக்கு தயாராகவில்லை என்று குற்றம் சாட்டி இருக்கிறார்.