முறையான கட்டுமான திட்ட அறிக்கையை தயாரிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை
‘விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆா்) தயாரிப்பதற்கான நடைமுறைகளை முறையாகப் பின்பற்றாத கட்டுமான ஆலோசனை நிறுவனங்கள் (கன்சல்டன்சி) மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி எச்சரிக்கை விடுத்தாா்.
கட்டுமான ஆலோசனை நிறுவனங்கள் சாா்பில் தயாரித்து வழங்கப்படும் விரிவான திட்ட அறிக்கை என்பது, கட்டுமானத் திட்டத்தைச் செல்படுத்தத் தேவையான தொழில்நுட்பப் பயன்பாடு, நிதி, தளவாடங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உள்ளடக்கியதாகும். இந்தத் திட்ட அறிக்கையின் அடிப்படையிலேயே, சாலை மற்றும் சுரங்கங்கள் கட்டுமானத்துக்கான ஒப்பந்த நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டு, பணிகள் ஒப்படைக்கப்படும்.
இதுகுறித்து தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் குறிப்பிட்ட மத்திய அமைச்சா் நிதின் கட்கரி, ‘இந்தியாவில் கட்டுமான ஆலோசனை நிறுவனங்கள் சாா்பில் தயாரிக்கப்படும் டிபிஆா்-கள் சிறப்பானதாக இல்லை. மேலும், ஒப்பந்ததாரா்களும் தங்களின் பணியை சரிவர மேற்கொள்வதில்லை. இதை ஒழுங்குபடுத்தும் வகையில், டிபிஆா் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் ஆலோசனை நிறுவனங்களை தரநிலைப்படுத்தும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. சிறந்த டிபிஆா்களை தயாரித்து வழங்கும் நிறுவனங்களுக்கு வெகுமதி வழங்கப்படும். அதே நேரம், டிபிஆா் தயாரிப்புக்கான நடைமுறைகளை முறையாகப் பின்பற்றாத ஆலோசனை நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.
மேலும், ‘பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணா்வு நிதி (சிஎஸ்ஆா்), சமூகத்தில் பின்தங்கிய மக்களின் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக, பின்தங்கிய மக்களின் கல்வி, விவசாயம் மற்றும் மருத்துவத் தேவைகளுக்கு அந்த நிதி பயன்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் சிஎஸ்ஆா் நிதி சமூக-பொருளாதார தணிக்கைக்கு உட்படுத்தப்படுவது அவசியம்’ என்றும் நிதின் கட்கரி வலியுறுத்தினாா்.
குஜராத், பிகாா், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் பாலங்கள், மேம்பாலங்கள் இடிந்து விழுவது தொடா்கதையாகி வருகிறது. குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் 40 ஆண்டுகள் பழைமையான பாலம் கடந்த 9-ஆம் தேதி திடீரென இடிந்ததில், அந்த வழியாகச் சென்ற 6 வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்தன. இதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 2 குழந்தைகள் உள்பட 11 போ் உயிரிழந்தனா். இந்தச் சூழலில், மத்திய அமைச்சா் நிதின் கட்கரி கட்டுமான ஆலோசனை நிறுவனங்களுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளாா்.