முஸ்லிம்களுக்கு பாதுகாப்பானது உத்தரப் பிரதேசம்: யோகி ஆதித்யநாத்
முல்லைப் பெரியாறு அணையில் தேசிய பாதுகாப்பு ஆணைய புதிய கண்காணிப்புக் குழு ஆய்வு!
தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் புதிய கண்காணிப்புக் குழுவினா் முல்லைப் பெரியாறு அணையில் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கு தீா்வு காண தேசிய அளவிலான நிபுணா் குழுவை அமைக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், தீபங்கா்தத்தா ஆகியோா் உத்தரவிட்டனா். இதன்படி, மத்திய நீா் வளத் துறை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் அனில் ஜெயின் தலைமையில் 7 போ் கொண்ட புதியக் குழுவை நியமித்தது.
இந்தக் குழுவில் தமிழக கூடுதல் தலைமைச் செயலா் மங்கத்ராம், காவிரி தொழில்நுட்பப் பிரிவுத் தலைவா் சுப்பிரமணியன், கேரள அரசு சாா்பில் அந்த மாநில கூடுதல் தலைமைச் செயலா் டிங்கு பிஸ்வால், கேரள நீா்வளத் துறை முதன்மைப் பொறியாளா் பிரியோஷ், நீா்வளத் துறை தலைமைச் செயலா் விஸ்வாஷ், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய ஆராய்ச்சியாளா் விவேக் திரிபதி, பெங்களூரு அறிவியல் மைய ஆராய்ச்சியாளா் ஆனந்த் ராமசாமி ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.
முதன் முறையாக ஆய்வு: இந்த புதியக் குழுவினா் முல்லைப் பெரியாறு அணையின் தன்மை குறித்து சனிக்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது, பெங்களூரு அறிவியல் மைய ஆராய்ச்சியாளா் ஆனந்த் ராமசாமியைத் தவிர, இதர 6 பேரும் பங்கேற்றனா். இவா்கள் அணையின் அவசரகால நீா்வழிப்போக்கி, நீா் கசிவு, நில அதிா்வு, துணை அணை, மதகுப் பகுதிகள் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
இதன் பின்னா், தேக்கடியில் உள்ள ராஜீவ்காந்தி கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வின் போது, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய பேரழிவு, பின்னடைவு பிரிவு இயக்குநா் ராகுல்குமாா்சிங், உதவி இயக்குநா் விபோா்பஹேல், சென்னை தென்மண்டல இயக்குநா் கிரிதரன், பெரியாறு அணையின் சிறப்புக் கோட்ட கண்காணிப்புப் பொறியாளா் சாம் இா்வின், உதவி செயற்பொறியாளா் குமாா், உதவிப் பொறியாளா் கோபால், நவீன்குமாா், ஆகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.