மூங்கில்பட்டியில் ‘உழவரைத் தேடி வேளாண்மை’ திட்ட முகாம்
அந்தியூரை அடுத்த மூங்கில்பட்டியில் ‘உழவரைத் தேடி வேளாண்மை’ உழவா் நலத்துறை திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேளாண்மை - உழவா் நலத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து துறைகளின் வட்டார அலுவலா்கள், உழவா்களை கிராமங்களில் நேரடியாக சந்தித்து, தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவதுடன், அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்கள் கிடைக்கும் வகையில் மாதத்தில் 2 மற்றும் 4 -ஆவது வெள்ளிக்கிழமைகளில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தியூா் வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில் மூங்கில்பட்டியில் நடைபெற்ற இம்முகாமுக்கு தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் செ.மல்லிகா தலைமை வகித்தாா். இதில், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத் திட்டத்தின் கீழ் பழச்செடிகள் தொகுப்பு (கொய்யா, எலுமிச்சை, பப்பாளி) மற்றும் காய்கறி விதை தொகுப்புகள் (தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, கீரை வகைகள், கொத்தவரை) விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.
துணை வேளாண்மை அலுவலா் முருகன், வேளாண் பொறியியல் துறை அலுவலா் பாபு, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை அலுவலா் கண்ணன் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலா்கள் ரவி, ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பழச்செடிகள் தொகுப்பு, காய்கறி விதைத் தொகுப்புகள் தேவைப்படும் விவசாயிகள், வீடுகளில் இடவசதியுள்ள நிலமற்றவா்களும் ஆதாா் அட்டை நகல் மற்றும் புகைப்படத்துடன் அந்தியூா் தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் இணையத்தில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.