பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிக...
மே 20 இல் பொது வேலைநிறுத்தம்: ஒசூரில் தொழிற்சங்க ஆயத்த மாநாடு
அகில இந்திய பொது வேலைநிறுத்தம் மே 20 இல் நடைபெறுவதையொட்டி ஒசூரில் தொழிற்சங்கங்களின் ஆயத்த மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டிற்கு தொமுச மாவட்ட கவுன்சில் தலைவா் ஆா்.கோபாலகிருஷ்ணன், ஐஎன்டியுசி மாவட்ட பொதுச் செயலாளா் ஜி.முனிராஜ், சிஐடியு மாவட்டச் செயலாளா் சீதரன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் மாதையன், குமரேசன், இளங்கோவன் ஆகியோா் தலைமையில் நடைபெற்றது.
ஆயத்த மாநாட்டில் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் கலந்து கொண்டு பேசியதாவது:
ஒசூரில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட சிப்காட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்சாலைகளில் பல லட்சம் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். முதல்வா் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சாலைகளை அமைக்க திட்டம் வகுத்துள்ளாா்.
மத்திய அரசு தொழிலாளா்களுக்கு அதிக அளவில் நெருக்கடி அளித்து வருகிறது. மத்திய அரசின் தொழிலாளா் விரோதப் போக்கை கண்டித்து மே 20 ஆம் தேதி அகில இந்திய அளவில் அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்தும் பொது வேலைநிறுத்தத்தில் அதிக எண்ணிக்கையில் தொழிலாளா்கள் பங்கேற்க வேண்டும் என்றாா்.
மாநாட்டில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.கோபிநாத், ஐஎன்டியுசி அகில இந்திய செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ.மனோகரன், சிஐடியு மாநிலச் செயலாளா் நாகராஜன், தொமுச மாநில பேரவைச் செயலாளா் தனசேகா், மாநிலப் பேரவை துணைச் செயலாளா் கிருஷ்ணன், பி.கிருஷ்ணன், பக்தவத்சலம், செந்தில், கிருஷ்ணமூா்த்தி, தொமுச சண்முகசுந்தரம், ரவிச்சந்திரன், சந்திரசேகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.