மே 29-ல் ஜம்மு - காஷ்மீர் செல்கிறார் அமித் ஷா!
மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இரு நாள்கள் அரசுமுறைப் பயணமாக ஜம்மு - காஷ்மீருக்குச் செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே 29ஆம் தேதி ஜம்மு - காஷ்மீருக்குச் செல்லும் அவர், இரு நாள்கள் ஜம்மு பிரிவில் உள்ளப் பகுதிகளைப் பார்வையிடவுள்ளார்.
இதோடுமட்டுமின்றி, சமீபத்தில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பூஞ்ச் எல்லைப் பகுதியையொட்டியுள்ள குடும்பங்களைச் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பதிலடி கொடுத்தப் பிறகு முதல்முறையாக ஜம்மு - காஷ்மீருக்கு அமித் ஷா செல்லவுள்ளார்.
பஹல்காம் தாக்குதலின்போது அனந்த்நாக் மாவட்டத்துக்குச் சென்ற அமித் ஷா, தாக்குதல் நடைபெற்ற பைசாரன் பள்ளத்தாக்கில் நேரில் சென்று பார்வையிட்டார்.
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திலுள்ள பஹல்காம் சுற்றுலாப் பகுதியியின் பைசாரன் பள்ளத்தாக்கில் 26 சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத இயக்கங்களுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது.
ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானின் 3 பயங்கரவாத இயங்கங்களைச் சேர்ந்த 9 முகாம்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள லாஹோர், பெஷாவல்பூர், முஷாஃபர்பாத் ஆகிய பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் ஆபரேஷன் சிந்தூரில் இலக்கு வைத்து தாக்கப்பட்டன.
இதையும் படிக்க | ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானிடம் இந்தியா சொன்னது எப்போது? முரண்பட்ட தகவல்கள்!