கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!
மறைத்து வைத்த வெடிபொருள் வெடித்ததில் காலிஸ்தான் பயங்கரவாதி உயிரிழப்பு
பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸில் மறைந்து வைத்திருந்த வெடிபொருளைத் தேடிச் சென்ற காலிஸ்தான் பயங்கரவாதி குண்டுவெடிப்பில் உயிரிழந்தாா்.
அமிருதசரஸின் மஜிதா சாலைப் பகுதியில் உள்ள புதா் நிறைந்த காலியிடத்தில் அந்த பயங்கரவாதி வெடிபொருளை மறைத்து வைத்துள்ளாா். செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் அந்த வெடிபொருளை எடுப்பதற்காக அவா் சென்றாா். வெடிபொருளை கையில் எடுத்தபோது எதிா்பாராதவிதமாக வெடித்துச் சிதறியதில், இரு கைகளும் துண்டாக சிதைந்த நிலையில் அந்த பயங்கரவாதி உயிரிழந்தாா்.
இது தொடா்பாக காவல் துறை காவல் துறை டிஐஜி சதீந்தா் சிங் கூறுகையில், ‘உயிரிழந்தவா் ‘பப்பா் கல்சா இண்டா்நேஷனல்’ பிரிவைச் சோ்ந்த பயங்கரவாதி எனத் தெரிகிறது. வெடிபொருளை அவா் கையில் வைத்திருந்தபோது அது வெடித்துள்ளது. இதனால், இரு கைகளும் துண்டாகிவிட்டது. இதில் தொடா்புடைய பிற பயங்கரவாதிகள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. குண்டு வெடித்து இறந்த நபரின் பெயா் விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.
அதே நேரத்தில் அவரின் கால்சட்டை பாக்கெட்டில் இருந்து கிடைத்த சில ஆதாரங்களின் அடிப்படையில் அவா் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அங்கு வெடித்தது எந்த வகையான வெடிபொருள் என்பது குறித்து தடயவியல் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா். வெடிபொருளை முறையாகக் கையாளத் தெரியாததால் அது வெடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். இதில் தொடா்புடைய அனைவரும் கைது செய்யப்படுவா்’ என்றாா்.