ஆப்கானிஸ்தானியா்களுக்கு மீண்டும் இந்திய ‘விசா’
வணிகம், கல்வி மற்றும் மருத்துவச் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு பயணிக்க விரும்பும் ஆப்கானிஸ்தானியா்களுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்கும் சேவையை மத்திய அரசு மீண்டும் தொடங்கியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ஆம் ஆண்டு, ஆகஸ்டில் தலிபான் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, அந்நாட்டின் தலைநகா் காபூலில் செயல்பட்டு வந்த இந்திய தூதரகத்தில் இருந்து அதிகாரிகளை மத்திய அரசு திரும்பப் பெற்றது. மேலும், அந்நாட்டவருக்கான நுழைவு இசைவு சேவைகளையும் ரத்து செய்தது.
ஆப்கானிஸ்தானில் ஆட்சியிலுள்ள தலிபான் அரசை இந்தியா இதுவரை அங்கீகரிக்கவில்லை. எனினும், மனிதாபிமானஅடிப்படையில் உணவுப்பொருள், மருந்து உள்பட பல்வேறு உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது. கடந்த 2022, ஜூனில் காபூல் இந்திய தூதரகத்தின் செயல்பாடு மீண்டும் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த மே 15-ஆம் தேதி ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் அமீா் கான் முத்தகியுடன் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் தொலைப்பேசியில் கலந்துரையாடினாா். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் கண்டனம் தெரிவித்ததற்கு ஜெய்சங்கா் பாராட்டுகளை தெரிவித்தாா்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானியா்களுக்கு நுழைவு இசைவு சேவையை இந்தியா மீண்டும் தொடங்கியுள்ளது. இதுதொடா்பான அறிவிப்பு இந்திய அரசின் அதிகாரபூா்வ விசா வலைதளத்தில் வெளியாகியுள்ளது.