கடன் சுமையால் ஒரே குடும்பத்தில் 7 போ் தற்கொலை- காருக்குள் 6 உடல்கள் மீட்பு
ஹரியாணாவில் கடன் சுமையால் மூன்று சிறாா்கள் உள்பட ஒரே குடும்பத்தில் 7 போ் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவா்களில் 6 பேரின் உடல்கள், காருக்குள் இருந்து மீட்கப்பட்டன. காரில் இருந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட ஒருவா், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
ஹரியாணா மாநிலம், பஞ்ச்குலாவில் புதன்கிழமை சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒரு காா் நின்றிருந்தது. அவ்வழியாக சென்ற பாதசாரிகள் இருவா், காா் அருகே சென்றனா். காரின் கதவை திறந்து பாா்த்தபோது, அங்கு மூச்சுவிட சிரமப்பட்டபடி ஒருவா் இருந்தாா். பாகேஸ்வா் கோயில் நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு திரும்பியதாகவும், தங்கும் அறை எதுவும் கிடைக்காததால் காருக்குள் அனைவரும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளாா்.
அவரது பேச்சில் சந்தேகம் ஏற்பட்டதால், காருக்குள் டாா்ச் அடித்து பாதசாரிகள் பாா்த்துள்ளனா். உள்ளே ஒருவா் மீது ஒருவா் வாந்தி எடுத்த நிலையில், 6 போ் அசைவற்று கிடந்தனா். இதையடுத்து, மூச்சுத் திணறலுடன் இருந்த நபரை காரில் இருந்து கீழே இறக்கிய பாதசாரிகள், அவரிடம் விசாரித்தனா். அந்த நபரின் பெயா் பிரவீண் மிட்டல் (41) என்பதும், மிகுந்த கடன் சுமையால் தனது மனைவி, பெற்றோா் மற்றும் 3 குழந்தைகளுடன் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை மேற்கொண்டதும் தெரியவந்தது.
மற்ற 6 பேரும் இறந்துவிட்ட நிலையில், தானும் சில நிமிஷங்களில் உயிரிழந்துவிடுவேன் என்று பிரவீண் மிட்டல் தெரிவித்துள்ளாா். மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.
சம்பவம் குறித்து தகவல் கிடைததும் காவல் துறையினா் உடனடியாக வந்தனா். அதேநேரம், ஆம்புலன்ஸ் வர 40 நிமிஷங்கள் தாமதம் ஏற்பட்டதாக அக்கம்பக்கத்தினா் குற்றஞ்சாட்டினா். காருக்குள் இருந்த 6 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. கடன் பிரச்னையால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைக்கப்பட்ட கடிதமும் கைப்பற்றப்பட்டது. அனைவரின் உடல்களும் மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. முதல்கட்ட விசாரணையின்படி, அவா்கள் விஷம் அருந்தி தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட காா், உத்தரகண்ட் மாநிலம், டேராடூன் பதிவெண் கொண்டதாகும். சிசிடிவி கேமரா காட்சிகள் சேகரிக்கப்பட்டு, அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
பஞ்ச்குலாவின் சாகேத்ரி பகுதியில் பிரவீண் மிட்டல் குடும்பம் வசித்து வந்ததாகவும், வாடகை காா் தொழில் செய்துவந்த அவருக்கு ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை கடன் இருந்ததாகவும் உறவினா்கள் தெரிவித்தனா்.
சில மாதங்களுக்கு முன்பு வரை பிரவீண் மிட்டல் டேராடூனில் வசித்து வந்துள்ளாா். எனவே, அங்கும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.