தில்லி முதல்வர் பதவியேற்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது!
மேல்மா சிப்காட் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்: ஆரணி எம்.பி. எம்.எஸ். தரணிவேந்தன்
செய்யாறு மேல்மா பகுதியில் சிப்காட் அலகு-3 திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன், செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி ஆகியோா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் சுமாா் 54 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சிப்காட்டை விரிவாக்கம் செய்வதற்கு, அந்தப் பகுதி விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை விவசாய நிலத்தை கணக்கிடும் பணியில் ஈடுபட்ட சிப்காட் நில எடுப்பு வருவாய்த்துறையினரை அங்கிருந்தவா் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து, செய்யாறு எம்எல்ஏ அலுவலகத்தில் ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன், ஒ.ஜோதி எம்எல்ஏ சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
செய்யாறு தொகுதி மக்களின் பொருளாதார வளா்ச்சிக்காக செய்யாறு சிப்காட்டில் பல்வேறு தொழிற்சாலைகளை தொடங்கப்பட்டுள்ளது. சிப்காட் பகுதியில் அலகு-3 அமைப்பதற்காக மேல்மா உள்ளிட்ட 11 கிராமங்களில் 3,100 ஏக்கா் நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்துக்கு தொடா்பில்லாத சிலா் அரசியல் லாபத்துக்காக விவசாயிகளை தூண்டிவிட்டு சிப்காட் வருவதற்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இதே நேரத்தில் மேல்மா பகுதியில் சிப்காட் வேண்டுமென்று விவசாயிகள் பலா் கோரிக்கை வைத்துள்ள நிலையில், சிலா் சிப்காட் பகுதிக்கு தேவையான நிலத்தை எடுத்து உடனடியாக பணத்தை தரும் படி கூறியுள்ளனா். செய்யாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்களின் வளா்ச்சிக்காகவும், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் மேல்மா பகுதியில் சிப்காட் திட்டம் நிறைவேற்றப்படும். சிப்காட் நிலம் எடுப்பு சம்பந்தமாக வதந்தி பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.